கரூர் 3,084 ஏக்கர் கோயில் நிலம் விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி.. நீதிமன்றத்தில் அரசு முக்கியமான வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவிஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி அளித்த கரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவை ரத்து செய்யும்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் நேற்று அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், கலெக்டரின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது.

திருத்தொண்டர் சபை அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில்,
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவிஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உட்பட ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடையவை ஆகும்.

the case opposing the registration of temple lands in Karur is scheduled for hearing in HC today

இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது. அதன்விளைவாக மேற்கண்ட 3,084 ஏக்கர் நிலங்களையும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்தநிலையில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஜூலை 9-ந்தேதி உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவின் மூலம் அறநிலையத்துறையும் தடை உத்தரவுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது.

உயர் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கோவில் நிலங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் இருக்றிது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். எனவே மேற்கண்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஏற்கனவே விதித்த தடையை நீக்கிய கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று ஆஜரான ராதாகிருஷ்ணன் முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு நாளை(அதாவது இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், மன்னர் காலத்தில் அந்த கோயில் பணியாளர்களுக்கு இனாமாக வழங்கப்பட்டது. அதற்கு பின்பு ரயத்துவாரி சட்டம் மூலம் பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாக்களை வைத்து அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். பலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கோயில் நிலம் என்று கருதி தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை மட்டுமே நாங்கள் நீக்கி உள்ளோம். கடந்த 60 ஆண்டுகளாக தனிநபர்கள் அனுபவித்து வருகிறார்கள். இதில் தலையிட உரிமையில்லை.. மனுதாரர் இந்த கோயிலுக்கு சொந்தமானவரோ அல்லது நிலத்தின் உரிமையாளரோ இல்லை.. எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், 3ம் நபராக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"இவ்வாறு அரசு தரப்பில் விஜய நாராயணன் வாதிட்டார்.

இந்து சமய அறநிலைத்துறைத்துறை தரப்பில் வாதிடுகையில், விதிமுறைகளின் படியே நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எறு கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கரூரில் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்று கூறப்படும் விவகாரத்தில் யார் , யார் பெயரில் நிலம் வந்துள்ளது, கோயில் பெயரில் உள்ளதா , தனிநபர்கள் பெயரில் உள்ளதா, எவ்வளவு நிலங்கள் உள்ளது என்பது உள்ளிட்ட முழு விவரங்களை கரூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும்.. அதேபோன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஆணையர் ஆகியோர் எந்த அடிப்படையில் தடை நீக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+