ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம்.. சமஸ்கிருதத்தில் அல்ல.. மதுரை மருத்துவ மாணவர்கள் விளக்கம்
மதுரை: ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி எடுத்தோம். சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தினர் விளக்கமளித்தனர்.
Recommended Video
மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன் தினம் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர் சங்கத் தலைவர் உறுதிமொழியை வாசிக்க அதை முதலாண்டு மாணவர்கள் வாசித்தனர். அதில் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் பெயரில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமஸ்கிருத சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக உணர்வுப்பூர்வமான விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஒரு அரசுக் கல்லூரியில் நிகழ்ந்த இப்படிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர் சங்கத்தினர் விளக்கம்
இந்நிலையில் அக்கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தனர். அதில் பேசிய சங்கத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், 'சரக ஷபாத்தில் உள்ளவற்றை அப்படியே சமஸ்கிருதத்தில் நாங்கள் வாசிக்கவில்லை. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தே நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். நாங்கள் வாசித்தது ஆங்கில மொழியாக்கம்தானே தவிர, நேரடி சமஸ்கிருத மொழி அல்ல.

தேசிய மருத்துவக் கழகம்
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தேசிய மருத்துவக் கழகம் அளித்துள்ள பரிந்துரையைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிதாக மருத்துவக்கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கான உறுதிமொழி என்று சரக ஷபாத்தைத்தான் தேசிய மருத்துவக் கழகம் பரிந்துரைக்கிறது. அதனையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி
ஹிப்போகிராட் உறுதிமொழிதான் கட்டாயம் என வலியுறுத்தவுமில்லை. அதே நேரம் சரக ஷபாத் உறுதிமொழியை எடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தவில்லை. இதற்கிடையே நேற்று பிற்பகல்தான் ஹிப்போகிராட் உறுதிமொழி எடுப்பது குறித்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளும் ஹிப்போகிராட் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சரக் ஷபாத் உறுதிமொழி கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications