உதயநிதியை வரவேற்க குவிந்த கூட்டம்! குலுங்கிய ஏர்போர்ட்! மாஸ் காட்டிய மதுரை மாவட்ட திமுகவினர்!
மதுரை: திண்டுக்கல் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்திறங்கிய அமைச்சர் உதயநிதிக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதேபோல் முதலமைச்சர் வந்தால் எந்தளவு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கொடுக்கப்படுமோ அதே அளவுக்கு அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மதுரை மாவட்ட திமுகவினர் மட்டுமல்லாமல் உதயநிதியை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக திண்டுக்கல் மாவட்ட திமுகவினரும் கணிசமான எண்ணிக்கையில் மதுரை ஏர்போர்ட்டில் குவிந்திருந்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக கடந்த வாரம் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தனது முதல் வெளியூர் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் சென்றிருக்கிறார். இதனிடையே திண்டுக்கல் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை ஏர்போர்ட் வந்திறங்கிய அவருக்கு, முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

குவிந்த கூட்டம்
மதுரை மாவட்ட திமுக செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகிய மூவரும் வளைத்துப் பிடித்து ஆட்களை மதுரை விமான நிலையத்தில் குவித்து வைத்திருந்தனர். விமான நிலையத்திலிருந்து உதயநிதியின் கார் வெளியே செல்ல அரைமணி நேரம் ஆனது. அந்தளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை மாவட்ட திமுகவினர் போதாது என்று திண்டுக்கல் மாவட்ட திமுகவினரும் உதயநிதியை தங்கள் மாவட்டத்துக்கு வரவேற்று அழைத்துச் செல்வதற்காக திரண்டிருந்தனர்.

உதயநிதி காரில்
அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணியை தனது காரில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வழியில் தோமையார்புரத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதேபோல் மதுரை டூ திண்டுக்கல் சாலையில் பல இடங்களில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவில் நின்று அமைச்சர் உதயநிதிக்கு திமுகவினர் உற்சாகமிகு வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல்லில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பஷீர் அகமது படத்தை திறந்து வைத்த உதயநிதி இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

முதல் வெளியூர் நிகழ்ச்சி
அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் முதல் வெளியூர் அரசு நிகழ்ச்சி திண்டுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கூடுதல் கவனமெடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிகளை ஐ.பெரியசாமியும், சக்கரபாணியும் ஒருங்கிணைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications