நாளை முதலீட்டாளர்கள் மாநாடு.. மதுரைக்கு வரும் ரூ.36,660 கோடி முதலீடு! ஐடி துறை வளர்ச்சி எகிறப்போகுது
மதுரை: மதுரையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக மதுரையில் வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே தொழில் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி, ஒசூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பிரம்மாண்ட முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

2 வாரங்களுக்கு முன் கோவையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் ரூ.43,844 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சர்வதேச நிறுவனங்கள், தேசிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் நிறுவனங்கள் மூலமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாளை மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், மேலமடை பகுதியில் கட்டப்பட்டுள்ள வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதன்பின் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தமாக ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன.
இதனால் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. மதுரையில் பெரிய தொழிற்சாலையோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத சூழலில், இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ஐடி துறையைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும், செமி கண்டக்டர் ஆலைகளுக்கான முதலீடுகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மேலமடை மேம்பாலம் திறக்கப்பட்டால், மதுரையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக அண்ணா நகர், கேகே நகர், அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பெரியளவில் சிக்னலில் நிற்கவே தேவையில்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் மதுரை மக்களிடையே பாலம் திறப்பு வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications