தனி ஒரு ஆளாக.. மதுரை நகைக்கடையில் நிஷாந்த் கொள்ளையடித்தது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் தனி ஒரு ஆளாக நிஷாந்த் எப்படி கொள்ளையடித்தார்? என்பதை விளக்கமாக தெரிவிக்கும் வகையில், போலீசார் ஏஐ மூலம் எடிட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நிஷாந்த் எப்படி தங்க நகைக்கடைக்குள் புகுந்தார் என்பது குறித்தும், கைரேகை பதியாமல் இருப்பதற்கு, கையுறை, முகமூடி, தொப்பி அணிந்திருந்தது, அங்கிருந்து எப்படி தப்பினார் என்பது குறித்தும் விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மதுரை தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிஷாந்த்தின் தந்தை மற்றும் காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டம் தீட்டி கொடுத்த காதலி மீனாட்சி
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் உள்ள பிரபல தனிஷ்க் ஜூவல்லரியில் கடந்த 12 ஆம் தேதி துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியது. ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 9 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடிய நிலையில் சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் நிஷாந்த் (வயது 25) என்பது தெரியவந்தது.
நிஷாந்த் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் எண் மூலம் விசாரித்ததில், நிஷாந்தின் காதலியும், மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான மீனாட்சி (23) என்பவர் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்ததில், மீனாட்சி தான் ஸ்கூட்டரை கொடுத்து கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தனி ஒரு ஆளாக எப்படி கொள்ளையடித்தார்?
தலைமறைவாக உள்ள நிஷாந்தை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், நிஷாந்த் தனி ஒரு ஆளாக கொள்ளையை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து விளக்கமாக தெரிவிக்கும் வகையில், போலீசார் ஏஐ மூலம் எடிட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், "கொள்ளை சம்பவத்திற்கு முன்பாக நகைக்கடையை நோட்டமிடும் வகையில் நிஷாந்த் 3 நாட்கள் வெவ்வேறு அடையாளத்துடன் நகைக்கடைக்கு வந்துள்ளார். பின்னர் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை, ஏற்கனவே நோட்டமிட்டபடி லிஃப்ட் வழியாக தனிஷ்க் நகைக்கடைக்குள் இறங்கி எவ்வித தடயமும் இல்லாதவாறு, கையுறை மற்றும் முகமூடி அணிந்து தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.
இருப்பிடத்தை மாற்றி வரும் நிஷாந்த்
இருசக்கர வாகனம், கண்காணிப்பு கேமிரா, செல்போன் ஆய்வுகள் மூலம் நிஷாந்த் தான் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக தந்தை சுரேஷும், தோழி மீனாட்சியும் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் குளத்தில் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகள் 5 அரை கிலோ மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இருப்பிடத்தை மாற்றி வரும் நிஷாந்தை கைது செய்யவும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
