மதுரை திருமலை நாயக்கர் மகால்.. உலக சுற்றுலா தினத்தில் குஷியான அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு
மதுரை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருமலை நாயக்கர் மகாலில் நடைபெறும் ஒலி, ஒளி காட்சிகளை இலவசமாக கண்டு களிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான மகால் தூங்கா நகரமான மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான இடமாகும். திருமலை நாயக்கர் மகாலில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான தூண்களை கட்டிப்பிடிக்க 5 பேர் இணைந்தால் கூட போதாது.

மதுரையின் பெருமையை சொல்லும் திருமலை நாயக்கர் மகால் தற்போது முழுக்க முழுக்க சுற்றுலா தளமாக மாறி உள்ளது. இங்குள்ள பிரம்மாண்டமான தூண்களை பார்க்கவும் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான பழங்கால பொருட்களை பார்ப்பதற்கு என்றும் வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இது மட்டுமின்றி மாலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒலி, ஒளி காட்சி என்ற தலைப்பில் நாயக்க மன்னரின் வரலாறுகளை எடுத்துரைக்க கூடிய வகையில் கம்பீரமான குரல் மற்றும் வண்ணமயமான விளக்குகள் மூலம் ஒலி ஒளி காட்சி நடைபெறுகிறது. இந்த காட்சியின் நுழைவு கட்டணமாக வெளிநாட்டவர்களுக்கு 80 ரூபாய் என்றும் உள்நாட்டவர்களுக்கு 60 ரூபாய் என்றும் வசூலிக்கப்படுகிறது. இது மகாலின் பராமரிப்பு செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருமலை நாயக்கர் மகாலில் நடைபெறும் ஒலி, ஒளி காட்சிகளை இலவசமாக கண்டு களிக்கலாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மகாலை பார்வையிட வரும் பயணிகளைக் கவர சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications