ஓபிஎஸ் வலை.. தேனிக்கு படையெடுத்த நிர்வாகிகள்.. அலெர்ட் ஆன ஆர்பி உதயகுமார்.. ‘சேதாரம்’ யாருக்கு?
மதுரை : ஓபிஎஸ், தன் சொத்து முழுவதையும் தருகிறேன், தன் பண்ணைத் தோட்டத்தையும் தருகிறேன், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் தருகிறேன் என வலைவீசி ஆட்களை சேர்க்க முயற்சித்தாலும் ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
ஈபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளை ஓபிஎஸ், தேனிக்கு அழைத்துப் பேசியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமாரே இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். ஈபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பதவி தருவதாகே பேசி வருவதாகவும், அவரது முயற்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் உதயகுமார்.

மடைமாற்றும் வேலை
அதிமுக இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவினரும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியினரும் செயல்படுகின்றனர். இரு பிரிவினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை மடைமாற்றும் வேலைகளில் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இல்லாத கட்சிக்கு நிர்வாகிகள் போட்டு என்ன பயன் என ஓ.பன்னீர்செல்வத்தைச் சாடியுள்ளார்.

எடப்பாடி அனுபவம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "அதிமுகவுக்கு வரும் சோதனைகளை எடப்பாடி பழனிசாமி தனது அனுபவம், பொறுமையால் எதிர்கொண்டு வெற்றி பெறுவார். தமிழகத்தில் தற்போது பயங்கரவாதம், தீவிரவாதம் தலைதூக்கி உள்ளது. எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள், அதிமுகவின் 51-வது பொன்விழாவை எழுச்சியோடு கொண்டாட ஏற்பாடு நடக்கிறது." எனத் தெரிவித்தார்.

தேனிக்கு போய் வந்ததும்
மேலும் பேசிய ஆர்.பி உதயகுமார் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாகச் சாடினார். தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் வந்து எங்களிடம் கேள்வி கேளுங்கள். நாங்கள் பதில் சொல்கிறோம். அதிமுக தொண்டர்களின் சார்பாக நாங்கள் பதில் சொல்கிறோம். அதிமுக நிர்வாகிகள் இரண்டு நாட்கள் பார்த்ததும் சிரிக்கிறார்கள். தேனிக்கு போய்விட்டு வந்ததும் இறுக்கமாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களை மூளைச்சலவை செய்கின்றனர்.

சேதாரம் யாருக்கு?
நீங்கள் நல்லவர் என்றால் நீங்கள் கூப்பிடாமலேயே உங்கள் வீட்டு வாசலில் வந்து எல்லோரும் இருப்பார்களே. அவ்வாறு இல்லை என்பதால்தானே உங்களிடத்தில் யாரும் வரவில்லை. இங்கு இருக்கும் நிர்வாகிகள், அவர்கள் பதவி கொடுக்கிறேன் எனச் சொல்கிறார்கள், நான் அங்கு செல்லப்போகிறேன் எனச் சொல்கிறார்கள். இல்லாத கட்சிக்கு நிர்வாகிகள் போட்டு என்ன பயன்? புயல் கரையைக் கடக்கும் பகுதி எப்போதும் சேதாரம் ஆகும். சேதாரம் ஆகாமல் நீங்கள் நின்றீர்கள் என்றால் வரலாற்றில் நீங்கள் நிற்பீர்கள்.

பதவி தருகிறேன்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியார் ஆதரவாளர்களிடம் தன் அணியில் சேர்ந்தால் என் சொத்து முழுவதையும் தருகிறேன், தன் பண்ணைத் தோட்டத்தையும் தருகிறேன், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் தருகிறேன் என வலைவீசி ஆட்களை சேர்க்க முயற்சித்து வருவது தோல்வியைத்தான் தழுவும். ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

ஓபிஎஸ் வலை
எலி வலை, கொசு வலை போன்று எந்த வலை போட்டாலும் ஓபிஎஸ்ஸுக்கு பயனில்லை. சமீபத்தில் மதுரை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே நலம் விசாரித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை கண்டு கொள்ளவில்லை, இதன் மூலம் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது தெரிய வருகிறது." எனப் பேசியுள்ளார்.

உதயகுமார் அலெர்ட்
ஈபிஎஸ் அணியில் இருக்கும் தென் மாவட்ட நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவும் முயற்சியில் இருப்பதை அறிந்து அலெர்ட் ஆகியுள்ள உதயகுமார், அங்கு சென்றால் பொறுப்பு கொடுப்பார்களே தவிர, அது எதற்கும் உதவாது, இங்கு இருந்தால் வருங்காலத்தில் பலன் கிடைக்கும், பாஜகவும் நம்மைத்தான் ஆதரிக்கிறது என்றெல்லாம் தூண்டில் போட்டிருக்கிறார். இது மதுரை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications