கொடுக்கவும் முடியாது.. எடுக்கவும் முடியாது.. "பண்பாளரின் மகன்" இதுவே என் அடையாளம்.. பிடிஆர் பேச்சு!
மதுரை: அரசியலில் எத்தனையோ பதவிகள் வந்தாலும், பண்பாளரின் மகன் என்பதுதான் என் முதல் அடையாளம், அதற்கு மேல் யாரும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசியலுக்கு வருவதற்கு முன், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழங்கிய அறிவுரை பற்றிய தகவலையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளார்.
மதுரை மாநகர் திமுக சார்பில் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் அன்பழகன் நூற்றாண்டு விழா, உதயநிதி பிறந்த நாள் விழா, கிறிஸ்துமஸ் விழா என்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கடந்த ஆண்டு நிதித்துறையில் நாம் எப்படி சாதனை படைத்தோமோ, அதே போல் இந்த ஆண்டும் நிதித்துறையில் பல்வேறு சாதனைகளை படைப்போம். படித்தவர்கள், புதுமையான சிந்தனை உள்ளவர்கள் முறையான இடத்தில் இருந்து, அவருக்கு சரியாக ஊக்கம் கொடுக்கும்பட்சத்தில் சிறப்பான இடத்தை அடைய முடியும்.

அன்பழகன் கூறிய அறிவுரை
பேராசிரியர் அன்பழகன் எனக்கு தந்தை போன்றவர். என்னை தனியாக அழைத்து நீண்ட நேரம் அறிவுரை கூறுபவர். இளைஞராக இருந்த அன்பழகன் என்னிடம், அரசியலுக்கு நீ இப்போது வந்தாலும் பிடிஆர் மகன் தான். 10 ஆண்டுகளுக்கு பின் வந்தாலும் பிடிஆர் மகன் தான். அதனால் உனது தொழிலில் சிறப்பான இடத்தை அடைந்த பின், அரசியலுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தான் நான் பல வங்கிகளில் பணியாற்றிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின்
தொடர்ந்து, என் மீது பாசத்தோடு, பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழகுபவர் உதயநிதி ஸ்டாலின். அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் நான் அவருக்கு தேவையான உதவிகளை செய்வேன். திமுகவில் திமுக உறுப்பினர்களின் வயது இதைவிட இடைவெளியைக் குறைப்பதாகவும் இளைஞர்களை ஈர்க்கவும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது திமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்று தெரிவித்தார்.

இதுதான் பெருமை
தான் சார்ந்த மதத்தை உண்மையாக பின்பற்றுபவர் அனைத்து மதத்தினருடனும் நல்ல அன்புடனும், பண்புடனும் இருப்பார்கள். வாழ்க்கையில் பதவி வரும், போகும். ஆனால் மனிதனின் அன்பு மற்றும் பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். உலகில் எனக்கு எந்த பதவி வந்தாலும், போனாலும் பிடிஆர் மகன் என்பது தான் எனக்கு முதல் பெருமை. அதற்கு மேல் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. பிடிஆர் மகன் என்பதே என் முக்கிய அடையாளம் என்று தெரிவித்தார்.

அனைவருக்கும் சம வாய்ப்பு
தொடர்ந்து, அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல கருத்துகளை பின்பற்றுபவன் நான். பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் என யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவருடனும் சமமாக பழக வேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications