‘ராகுல் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்..’ - கொந்தளித்த சீமான்.. முதல்வர் பேச்சையும் விட்டு வைக்கலயே!
மதுரை : நரேந்திர மோடியை எதிர்க்க ஆள் வேண்டும், அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ராகுலின் நடைபயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் செல்வது நடைபயணம் அல்ல அது நடைப்பயிற்சி என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தான் நிமிடத்திற்கு நிமிடம் உழைப்பதாக இன்று மதுரையில் பேசியதையும் விமர்சித்துள்ளார் சீமான்.

முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம்
மதுரை உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் பாடுபடுகிறேன் எனக் கூறுகிறார். அது அவர் சொல்வது தான். முதல்வர் என்னவாக பாடுபடுகிறார் என்பதில் தான் உள்ளது. முதல்வர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களைப் போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். நம் முதல்வர் உழைக்கிறார், ஓய்வின்றி பாடுபடுகிறார் என மக்கள் சொல்ல வேண்டும்.

அவரே சொல்கிறார்
அவரே மேடைக்கு மேடை நான் உழைக்கிறேன் பாடுபடுகிறேன் என சொல்லக்கூடாது. நாம் தான் சொல்ல வேண்டும். 80 சதவீத பிரச்சனைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் கூறுகிறார். பிறகு ஒரு கூட்டத்தில் 70 சதவீத பிரச்சனைகளை சரி செய்து விட்டோம் என சொல்கிறார். 8 பிரச்சனைகளையாவது தீர்த்தார்களா என்பது தான் கேள்வி. இது ஆட்சி கிடையாது. ஷாருக்கான், சல்மான்கான், நடிகர் நடிகைகளை தான் மாடல் என்பார்கள். திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு பல ஆயிரம் கோடியில் விளம்பரம் மட்டும் தான் நடக்கிறது.

கையேந்த வைப்பது புதுமையா
எதற்காக மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்? 1000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக கொடுக்கும் கல்வியை தரமாக கொடுங்கள். எங்களுக்கு படிக்க காசு இல்லை, அப்பா அம்மா வறுமையில் உள்ளார்கள் என மாணவிகளை கையேந்த வைப்பது புதுமை அல்ல. பெண்களுக்கு கல்வியை கொடுத்து வளமாக்க வேண்டும்.
பெண்கள் கல்வியை கற்று அதற்கேற்ற வேலையை பெற்று சம்பாதிக்க வேண்டும். அண்ணன், தம்பி, கணவன் யாரையும் சார்ந்து இல்லாமல் தன் காலில் நின்று உழைக்கும், வாழும் நிலையை உருவாக்குவதே புதுமை.

சிலிண்டர் வாங்க முடியுமா
குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கோ நிதி வலிமை, நிதி ஆதாரம் இல்லை எனக் கூறினார்கள். ஆனால் கல்லூரி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க 696 கோடி எப்படி வந்தது? யார் கேட்டது 1000 ரூபாய், கல்வியின் தரத்தை தரமாக மாற்றி கொடுங்கள். 1000 ரூபாயை வைத்து ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா? 1000 ரூபாயை வைத்து எந்தக் கல்லூரியிலும் சேர முடியாது." எனத் தெரிவித்தார்.

ராகுல் நடை பயணம்
அப்போது ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த சீமான், "ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை பற்றித்தான் பேசுகிறார், ஆனால் தேசிய இனங்களின் உரிமை பறிக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஒரே தேர்தல் என்பதால் ஒரு மாநிலத்தின் தேசிய இனங்களின் உரிமை அறவே பறிக்கப்படுகிறது. இப்போது எந்த திட்டத்தை எதிர்த்து பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது? நீட் தேர்வா? ஜிஎஸ்டியா? எந்த திட்டமாக இருந்தாலும் அதனுடைய வேர் காங்கிரஸ் கட்சியாக இருக்கிறது.

மாற்றம் எப்படி வரும்?
அதனால் நீங்கள் எதையும் பேச தகுதியற்று போய்விட்டீர்கள். அரை நூற்றாண்டு காலம் இந்தியாவை உங்கள் தாத்தா முதல் காங்கிரஸ் ஆட்சி செய்து இருக்கும்போது வராத மாற்றத்தை ராகுல் கொண்டு வருவாரா? காலையும், மாலையும் நடப்பதால் அவருக்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம். முதன்மைச் சாலையில் ஏன் நடைபயணம் செல்கிறீர்கள். என்னை போன்று கிராமத்திற்கு வாருங்கள். அப்போதுதான் மக்கள் எவ்வளவு வறுமையோடு இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

தகுதி இல்லை
பிரதான சாலையில் காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடப்பது நடைப்பயிற்சியே, அது நடை பயணம் அல்ல. இந்த அரசு செய்யும் எதேச்சதிகாரத்தை மக்கள் மன்றத்தின் மூலம் மக்களை கூப்பிட்டு வைத்துப் பேசுங்கள். அதற்கு உங்களுக்கு தகுதி இல்லை எனில் இந்த திட்டங்களை எல்லாம் நீங்கள்தான் கொண்டு வந்தீர்கள் என ஒரே வரியில் சொல்லி முடித்து விடுவார்கள். மோடியை எதிர்க்க ஆள் வேண்டும், அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications