விஜய் டயலாக்.. வேற வெர்சனில் சொன்ன செல்லூர் ராஜு! எத்தனை தீர்ப்பு வந்தாலும் எடப்பாடி தானாம்
மதுரை: அதிமுக தொண்டர்கள் முடிவு செய்துவிட்டால் அதை யாரும் மாற்ற முடியாது, எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி மதுரை மேற்கு தொகுதியின் 10 பிரச்சினைகளை கொண்ட பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். மாநகராட்சி 82, 83 வார்டுகளில் வீட்டு வசதி வாரிய நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் 973 குடும்பங்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநகராட்சி பகுதிகளான விராட்டிப்பத்து, பொன்மேனி, கோச்சடை உள்ளிட்டவற்றில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 63, 65 வார்டுகளில் தாழ்வாக செல்லக்கூடிய உயர் மின் கம்பிகளை அகற்ற வேண்டும் என்றும், தொகுதிக்குள் அரசு இருபாலர் கல்லூரியை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளின் பட்டியலை செல்லூர் ராஜு வழங்கினார்.

கோரிக்கைகள்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்களின் பிரச்சனைகள் குறித்து எவ்வளவு மனுக்கள் கொடுத்தாலும் அரசு நிறைவேற்றுவதில்லை. தற்போது முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 10 கோரிக்கைகளை மனுவாக அளித்து உள்ளேன்.

தாலிக்கு தங்கம்
தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஒரு பெண் திட்டத்தால் தலா 1 லட்சம் வரை பயனடைந்து வந்தனர். புதுமைப் பெண் திட்டத்தால் ஒருவருக்கு 36,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். எந்த திட்டம் சிறந்த திட்டம் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். எந்தவொரு குளறுபடியும் இல்லாமல் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்.

புதுமைப்பெண்
திமுக தலைமையிலான தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அறிவிப்போடும், விளம்பரத்தோடும் நிற்கின்றன. நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதால் பலர் நகைகளை இழந்து உள்ளனர். 48 இலட்சம் பேர் பயனடைய கூடிய நகைக்கடன் தள்ளுபடியில் 13 இலட்சம் பேர் மட்டுமே பயன் அடைந்து உள்ளனர்.

எய்ம்ஸ்
உதயநிதி, கனிமொழி பேச்சை கேட்டு மக்கள் நகைகளை இழந்து, உள்ளதும் போச்சு நோல்லக்கண்ணா என புலம்பி கொண்டு உள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர எங்கள் ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து விட்டோம். எங்கள் ஆட்சியில் கொரோனாவால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஆனது. தமிழக அரசு விரைவாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும்.

எத்தனை தீர்ப்பு வந்தாலும்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக உள்ளது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது. தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என அடித்து சொல்கிறேன். மாற்று கருத்து ஏதுமின்றி சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வர் ஆவார்." என்று உறுதியாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications