சாலை விபத்தில் சிக்கி ஆசிரியை பலி - கல்லூரி திறந்த முதல்நாளில் நடந்த சோகம்
கல்லூரி திறந்த முதல் நாளிலேயே பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை: பாலிடெக்னிக் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் ஆசிரியை. மதுரை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த ஆசிரியை பெயர் ஆர்த்தி என்பதாகும். இவர் அலங்காநல்லூரை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர். தமிழகத்தில் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தனது தோழி குரல்மொழியுடன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வேலைக்கு சென்றார் ஆர்த்தி.

வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் மதுரையில் நத்தம் ரோடு வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். சத்திரப்பட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டன.
விபத்தில் சிக்கிய காரில் ஒன்று திரும்பி அந்த வழியாக வந்த ஆசிரியைகள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். குரல்மொழிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அதில் இருந்த பழனிச்சாமி, இவரது மனைவி அமுதா, மகன் அருண்குமார், மருமகள் சரண்யா, பேத்திகள் காவியா, சன்விகா மற்றும் ராதா, டிரைவர் ராமர் என 8 பேர் காயம் அடைந்தனர். இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி திறந்த முதல் நாளிலேயே விபத்தில் சிக்கி கல்லூரி ஆசிரியை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் மூவர் பலி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோவலக்காட்டை சேர்ந்தவர் கௌதம். இவருக்கு திருமணமாகி சபிதா என்ற மனைவியும், ஒரு வயதில் வருண் ஆதிக் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கௌதம் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அன்றிரவே ஆம்னி வேனில் சேலத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் ஊதியூர் குட்டைக்காடு என்ற இடத்தின் அருகே சென்றபோது ஆம்னி வேன் மீது எதிரே வந்த லாரி அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், கௌதம் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கௌதமும், அவரது மகன் வருண் ஆதிக்கும் உயிரிழந்தனர்.
மற்றவர்களுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கௌதமின் தாயார் ஜெயகொடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்பூர் மாவட்டம் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications