என்னங்க இதெல்லாம்? டென்ஷனான எடப்பாடி.. மதுரைக்கு பறந்த போன்.. முன்னால் வந்த மாஜி! ஒரே ஆள் ‘இரும்பு’!
மதுரை : பிரதமர் மோடி வருகையின்போது மதுரையில் நடந்த 'சம்பவம்' அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், டென்ஷனான எடப்பாடி பழனிசாமி உடனே அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு போன் போட்டுள்ளார்.
தான் ஓபிஎஸ்ஸுடன் இணைய முடியாது எனக் கூறி வந்த நிலையில், பிரதமர் மோடியின் விருப்பத்தை அடுத்து ஓபிஎஸ்ஸுடன் இணக்கமாகச் செல்லத் தயாராகி விட்டதாக வெளியான தகவல்களால் கடுமையாக அப்செட்டாகி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் அருகே தான் சிரித்த முகத்துடன் நிற்கும் புகைப்படம் பயங்கரமாக பரவிய நிலையில் தான், தனது முடிவில் மாற்றம் இல்லை என ஆர்பி உதயகுமாரை விட்டு விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக எந்தவொரு பேச்சும் எழுந்துவிடக்கூடாது என உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. விரைவில் அவரே முன்னால் வருவார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி விசிட்
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களுரில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று முன் தினம் வந்தடைந்தார். பாஜக நிர்வாகிகள், திமுக அமைச்சர்கள் என பலரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்புவதாக தகவல்கள் வரும் நிலையில், இருவருமே மோடியை வரவேற்கச் சென்றிருந்தனர்.

இருவரையும் அருகருகே
பிரதமர் மோடியின் இந்த வருகையில் இருவருமே சமமாக ட்ரீட் செய்யப்பட்டனர். ஈபிஎஸ் தரப்பில் 5 பேருக்கும் ஓபிஸ் தரப்பில் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒரே வரிசையில் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்கள் இடையே சிலர் நின்ற நிலையில், பிரதமர் மோடி வந்தபோது தள்ளித்தள்ளி நின்ற அவர்கள் இருவரையும் அருகே வருமாறு அழைத்து அவர்களிடமிருந்து பூங்கொத்தைப் பெற்று வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி. மீண்டும் பிரதமர் மோடியை வழியனுப்பவும் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் இரு தரப்பினரும் வருகை புரிந்தனர்.

ஒரே சிரிப்பு
பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அனைவரிடமும் ரோஜாப்பூக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும், அருகருகே வைத்துக்கொண்டு பிரதமர் மோடி சிரித்தபடி பேசியுள்ளார். பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி பூ கொடுத்து வழி அனுப்புவதும், ஈபிஎஸ்ஸுக்கு அருகில் ஓ.பன்னீர்செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமுமே தனியாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், நலம் விசாரித்து சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு மோடி கிளம்பிச் சென்றார்.

இந்தப் பக்கம் அந்தப் பக்கம்
பிரதமர் விமானத்திற்கு அருகே வருவதற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே, வழியனுப்பச் செல்வபர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். வரும்போதே பிரதமர், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் அருகருகே வரச் சொன்னதால், வழியனுப்பும்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அருகருகிலேயே நின்றனர். ஓபிஎஸ்ஸுக்கு அருகில் எம்.பி ஆர் தர்மர் அடுத்து ராஜன் செல்லப்பா என வரிசையாக நின்றனர். அதேபோல எடப்பாடிக்கு அந்தப் பக்கம் அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி, தங்கம் தென்னரசு என வரிசையாக நின்றனர்.

தர்ம சங்கடம்
பிரதமர் மோடி வருவதற்கு முன்பே வரிசையாக நிற்க வைக்கப்பட்டதால் அருகருகே நின்ற எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் முகம் பார்த்துக் கொள்ள முடியாமல் நெளிந்தனர். கிட்டத்தட்ட 5 மாத காலமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை, பிரதமர் வருகையின்போது தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படாததால், இப்படி வந்து மாட்டிக்கொண்டு விட்டோமே என இருவருமே தர்ம சங்கடத்தோடு அதை மறைக்கும் விதமாக சிரித்துக் கொண்டிருந்துள்ளனர்.

ஹப்பாடா- நிம்மதி
கையை வீசினால் அடுத்தவர் மீது படும் நெருக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே முகம் பார்த்துக் கொள்ளவில்லை. ஓபிஎஸ்ஸை சந்திக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, தனக்கு இந்தப் பக்கம் நின்ற திமுக அமைச்சர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதேபோல, ஓபிஎஸ்ஸும் இந்தப் பக்கம் திரும்பாமல், தர்மர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருந்தார். பிரதமர் மோடி வந்து ரோஜாப்பூவை பெற்றுக்கொண்டு தங்கள் இருவரையும் கடந்து சென்ற பிறகுதான் இருவருமே நிம்மதி அடைந்துள்ளனர்.

உதயகுமாருக்கு பறந்த போன்
இதற்கிடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் அருகருகே நிற்கும் படங்கள் வெளியாகி அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தின. பிரதமர் மோடி, போகும்போது சொன்னதைக் கேட்டு வரும்போது ஓபிஎஸ்ஸுடன் இணைந்து எடப்பாடி நின்றதால், இணைப்புக்குச் சம்மதம் தெரிவிக்கிறாரா என்ற கோணத்திலும் பேச்சுகள் எழுந்தன. இதனால், எடப்பாடி பழனிசாமி கடுமையாக அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. உடனே முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு போனை போட்டுள்ளார் ஈபிஎஸ்.

உடனே முன்னால் வந்த ஆர்பி
விமான நிலையத்தில் நடந்தது பற்றி தகவல் பரவுகிறது, நாம் இறங்கிச் சென்றுவிட்டதாக பேசுகிறார்கள், நம்ம நிலைப்பாட்டில் மாற்றம் இல்லைனு உடனே பிரஸ் மீட்டில் தெளிவாச் சொல்லிடுங்க என உதயகுமாரிடம் அறிவுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்தே நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பேசியது பற்றி விளக்கினார் ஆர்பி உதயகுமார்.

ஹவ் ஆர் யூ?
"நாங்கள் வரவேற்கச் சென்றபோது பிரதமர் மோடி உற்சாகமாக வந்தார். ஆளுநர் ரவியிடம் சால்வையை பெற்ற பிறகு அமைச்சர் பெருமக்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே வந்தபிறகு மகிழ்ச்சியுடன் "ஹவ் ஆர் யூ?" என ஆங்கிலத்தில் கேட்டார். அதை அருகில் நின்று நான் கேட்டேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஐயம் ஃபைன்" என்றார். மற்ற யாரிடமும் அவர் பேசவில்லை. 42 பேர் வரை வரிசையில் பலர் நின்றாலும் வேறு யாருடனும் பேசவில்லை.

நடந்தது இதுதான்
பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நலம் விசாரித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். இதுதான் அங்கே நடந்தது. வழியனுப்பும்போதும் உற்சாகமாக வந்த பிரதமரை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் சென்றோம். பொதுக்குழுவில் அனைவரும் ஒன்றுகூடி அதிகாரப்பூர்வமாக எடுத்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி கூறியதுதான் எங்கள் நிலைப்பாடு.

எப்படி சொல்லணும்னு சொன்னீங்கனா
ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை. இதை எப்படி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று சொன்னால் அப்படியும் சொல்கிறேன். இதுதான் நடந்தது. எடப்பாடியாரின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர் எடப்பாடியாரை பிரதமர் மோடி மனதார விசாரித்தது அதிமுக தொண்டனுக்குப் பெருமை" என ஆர்பி உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

வாய்ப்பில்ல ராஜா
விமான நிலையத்தில் இருவரிடமும் சேர்த்து பிரதமர் மோடி பேசுவது போல வெளியான படத்தால், தனது முடிவில் இருந்து பின்வாங்கி விட்டதாக பரவிய தகவலால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிசாமி, உதயகுமாரை விட்டு விளக்கம் கொடுத்தார். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மீண்டும் ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என தானே தெளிவாகச் சொல்லவும் ஈபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பிரஸ்மீட்டில் இதுபற்றி கேள்வி எழுந்தால் கட் அண்ட் ரைட்டாக ஈபிஎஸ் மீண்டும் சொல்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications