5 முறை லோக்சபா எம்.பி... உடுப்பி சிங்கம்... காங். மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்!
மங்களூரு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் (வயது 80) முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ். கர்நாடகாவின் உடுப்பியில் 1941-ம் ஆண்டு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். அப்போது உடுப்பி மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்தது. ஆஸ்கர் பெர்னாண்டஸுடன் பிறந்தவர்கள் 12 பேர்.

1972-ம் ஆண்டு உடுப்பி மாநகராட்சி கவுன்சிலராக அரசியல் பயணத்தை தொடங்கினார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். உடுப்பி லோக்சபா தொகுதியில் இருந்து 1980-ம் ஆண்டு முதன் முதலாக எம்.பி.யாக வென்றார். அதன் பின்னர் 1984,1989,1991, 1996 என லோக்சபா தேர்தல்களிலும் உடுப்பியில் போட்டியிட்டு வென்றார். உடுப்பியில் மொத்தம் 5 முறை ஒரே தொகுதியில் வென்று எம்.பி.யானார்.
1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் டாக்டர் வி.எஸ். ஆச்சார்யாவை தோற்கடித்தார். 1984-ல் 62% வாக்குகள் பெற்று பாஜகவின் கே.எஸ்.ஹெக்டேவை தோற்கடித்தார். 1989-ல் ஜனதா தளத்தின் எம்.சஞ்சீவா, 1991-ல் பாஜகவின் ருக்மய்யா புஜாரி 1996-ல் பாஜகவின் ஜெயராம ஷெட்டி ஆகியோரை தோற்கடித்தார். ஆனால் 1998-ல் பாஜகவின் ஜெயராம் ஷெட்டியிடம் தோல்வி அடைந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், அதன்பின்னர் தேர்தலிலேயே போட்டியிடவில்லை.
1998-ல் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். 2004-ம் ஆண்டும் ராஜ்யசபா எம்.பி.யானார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 2004-2009 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் பணியாற்றினார். சோனியா காந்தி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மிக முக்கியமானவர். நேரு குடும்பத்தின் மிக மிக நம்பிக்கைக்குரியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு டெல்லி மேலிட பிரதிநிதியாக ஆஸ்கர் பெர்னாண்டஸ் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
2010-ம் ஆண்டு மங்களூரு பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதியன்று யோகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார் ஆஸ்கர் பெர்னாண்டஸ். இதன் காரணமாக மங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் சுயநினைவை இழந்தார் அவர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - எங்கெங்கு மழை