அள்ளி குவித்த அதானி துறைமுக நிறுவனம்.. வருவாய் 24 சதவீதம் உயர்வு! 46 ஆயிரம் கோடிக்கு டார்கெட்
மும்பை: அதானி துறைமுக நிறுவனம் 2026-27 நிதியாண்டின் 2-வது காலாண்டில் வருவாய் மற்றும் செயல்பாட்டு லாபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து, கடல்சார் சேவைகள் ஆகியவற்றில் பெற்ற வருவாயே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அதானி குழுமத்தின் ஒரு அங்கமாக அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் (APSEZ) நிறுவனனம் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக செயல்பாட்டு நிறுவனமாக இது உள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதாவது, நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 24 சதவீதம் அதிகரித்து ரூ.11,340 கோடியாக உயர்ந்துள்ளது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.9,145 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் உயர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.6,807 கோடியாக உள்ளது. வரிக்குப் பிந்தைய நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.3,682 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.3,120 கோடியாக இருந்தது.
2026-27 ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிறுவனத்தின் வருவாய் 21 சதவீதம் உயர்ந்து ரூ.22,161 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.13,347 கோடியாகவும், நிகர லாபம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.7,332 கோடியாகவும் உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து, கடல்சார் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் அரையாண்டில் கிடைத்த வலுவான வளர்ச்சியைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை ரூ.1,000 கோடி உயர்த்தி ரூ.44,000 கோடி முதல் ரூ.46,000 கோடி வரை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதேபோல், செயல்பாட்டு லாப இலக்கும் ரூ.1,000 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.26,000 கோடி முதல் ரூ.27,000 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூலதனச் செலவுக்கான இலக்கு ரூ.3,000 கோடி அதிகரிக்கப்பட்டு ரூ.15,000 கோடி முதல் ரூ.17,000 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு துறைமுகங்கள் மூலம் அதிக வருவாய்
நிறுவனத்தின் உள்நாட்டு துறைமுகப் பிரிவின் வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.7,177 கோடியாக உள்ளது. இந்தப் பிரிவின் செயல்பாட்டு லாபம் ரூ.5,201 கோடியாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு துறைமுகப் பிரிவின் வருவாய் 71 சதவீதம் உயர்ந்து ரூ.1,839 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவின் செயல்பாட்டு லாபம் 3.4 மடங்கு உயர்ந்து ரூ.878 கோடியாக உள்ளது.
இலங்கையின் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம், தான்சானியாவில் உள்ள துறைமுகங்களின் செயல்பாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன. கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் திறனை ஆண்டுக்கு 16 லட்சம் சரக்குப் பெட்டிகளில் இருந்து 32 லட்சம் சரக்குப் பெட்டிகளாக உயர்த்தும் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடன் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நிறுவனம் ரூ.10,521 கோடியை மூலதனச் செலவாகப் பயன்படுத்தியுள்ளது. இதே காலகட்டத்தில் செயல்பாடுகள் மூலம் ரூ.13,327 கோடி ரொக்க வருவாய் கிடைத்துள்ளது.நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.57,717 கோடியாகவும், கையிருப்பு ரொக்கம் ரூ.12,502 கோடியாகவும் உள்ளது. நிகரக் கடன் மற்றும் செயல்பாட்டு லாபத்துக்கு இடையிலான விகிதம் 1.8 மடங்காக உள்ளது. இந்த தகவல்களை அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஸ்வானி குப்தா கூறுகையில், உள்நாட்டு துறைமுகங்கள் நிறுவனத்தின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. சர்வதேச துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சேவைகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றன" என்றார். இதற்கிடையே, 2030-31 நிதியாண்டுக்குள் ரூ.91,500 கோடி வருவாயையும், ரூ.52,000 கோடி செயல்பாட்டு லாபத்தையும் எட்டுவதற்கும் அதானி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications
