நெருங்குது தேர்தல்.. எஸ்சி/ஒபிசிக்கு சலுகை.. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு எடுத்த 2 மேஜர் முடிவு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை சிவசேனா - பாஜக, என்.சிபி கூட்டணி அரசு எடுத்துள்ளது. குறிப்பாக ஒபிசி, எஸ்சி வாக்குகளை கவரும் முயற்சியாக இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷின்டே), பாஜக, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.

அமைச்சரவை கூட்டம்: ஹரியானாவில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் பாஜக, மகாராஷ்ட்டிராவிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில், தான் மகாராஷ்டிராவில் இரண்டு மேஜர் முடிவுகளுக்கு இன்று அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எஸ்.சி மற்றும் ஒபிசி வாக்கு வாங்கியை குறிவைத்து மகாராஷ்டிர அரசு இன்று எடுத்துள்ள முடிவு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இரண்டு முடிவுகள்: இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது. குறிப்பாக மாநில எஸ்.சி ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்குவது மற்றும் ஒபிசி பிரிவினருக்கான கிரிமி லேயர் உச்ச வரம்பை 8 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக மத்திய அரசை உயர்த்த கோருவதற்கான ஒப்புதல் என இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
அவசர சட்டம்: மேலும், எஸ்சி ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான அவசர சட்டம் வரும் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா ஆளும் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு குறைவு: அண்மையில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியான காங்கிரஸ், தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி அதிர்ச்சி கொடுத்தது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை இந்தக் கட்சிகள் வென்றன. கடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் வென்ற பாஜக, இந்த தேர்தலில் வெறும் 9 தொகுதிகள் மட்டுமே வென்றது.












Click it and Unblock the Notifications