ஆஹா.. மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா.. தசரா கூட்டம் நடத்த சிவசேனா கோஷ்டிகள் மோதல்
மும்பை: தசரா பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், மும்பை சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எங்களுக்கு அனுமதிக்க கோரி சிவசேனாவின் இரு அணிகளும் போட்டி போட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே மும்பை ஐகோர்ட்டை நாடியுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் சில நாட்களில் தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் மும்பையிலும் தசரா பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்படும்.
குறிப்பாக மும்பை சிவாஜி பார்க்கில் சிவசேனாவின் நிறுவனரும் உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான பால் தாக்கரே காலத்தில் இருந்தே ஆண்டுதோறும் சிவசேனா கட்சி சார்பில் தசரா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிவசேனா பிளவு
கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு சிவசேனா இரு அணியாக பிரிந்துள்ளதால் தசரா பொதுக்கூட்டம் சிவசேனாவின் இரு அணியில் யார் தலைமையில் நடைபெறும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சி எங்களுக்கு தான் சொந்தம் என்றும் உத்தவ் தாக்கரேவும், ஏக்னாத் ஷிண்டேவும் மாறி மாறி கூறி வரும் நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

தசரா பொதுக்கூட்டம்
எனவே இந்த ஆண்டு யார் தலைமையில் தசரா பொதுக்கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவினரும், ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சார்பிலும் மாநகராட்சியிடம் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி சிவசேனாவின் இரு அணியினருக்கும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து அறிவித்தது.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு
ஒரு அணிக்கு நடத்த அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதால் மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஏக்னாத் ஷிண்டே அணியினர் இதற்கு மாற்று ஏற்பாடாக பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மாநகராட்சி இப்படி சிவசேனாவின் இரு அணியினரும் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த தடைவிதித்ததால் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வாக உத்தவ் தாக்கரே தற்போது மும்பை ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

ஐகோர்ட்டில் வழக்கு
இது தொடர்பாக மும்பை ஐக்கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்துள்ள மனுவில், 'அடுத்த மாதம் 5-ஆம் தேதி மும்பை சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டத்தை நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்குமாறும்.. பொதுக்கூட்டத்திற்கு நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications