கொசுக்களை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்துக்கொண்டு நீதிமன்றம் வந்த தாவூத் இப்ராகிம் கூட்டாளி!
மும்பை: நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிமின் கூட்டாளி கொசு அதிகமாக கடிப்பதாக கூறி, கொசுக்களை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து நீதிமன்றம் கொண்டு வந்து எனக்கு கொசு வலை வழங்க உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் கூறிய சம்பவம் நடந்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் ஆகிய தாதாக்களுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் எஜாஸ் லக்வாடா.
இவர் மும்பை காவல்துறையால் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். லக்வாடா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

மும்பை தலோஜா சிறை
கைது செய்யப்பட்டதில் இருந்து லக்வாடா நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள மிக முக்கிய தாதாக்களில் ஒருவராக வலம் வந்த லக்வாடா நேபாளத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதில் இருந்து அதாவது கடந்த 2 ஆண்டுகளாகவே தலோஜா சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.

கொசு வலை கேட்டு கோரிக்கை
நவி மும்பையில் இருக்கும் இந்த தலோஜா சிறையில் கொசுக்கடி அதிகமாக இருப்பதாக அதிகாரிகளிடம் லக்வாடா புகார் கூறியிருக்கிறார். கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக கொசு வலை வழங்க வேண்டும் என்றும் சிறை அதிகாரிகளிடம் லக்வாடா கோரிக்கை விடுத்து இருக்கிறார். ஆனால், இந்த கோரிக்கையை பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் நிராகரித்து விட்டார்களாம்.

நீதிமன்றத்தில் மனு
இதையடுத்து, மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு கொசு வலை வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், சிறைச்சாலையில் தனக்கு கொசு வலை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு காரணங்கள் எனக்கூறி கொசு வலை பயன்படுத்த எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தனக்கு கொசு வலை அனுமதி வேண்டும் என்று கூறியிருந்தார்.

இறந்த கொசுக்களை பிடித்து
இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக நீதிமன்றத்தில் லக்டாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை நீதிமன்றத்தில் லக்டாவாலா காட்டினார். அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இறந்த கொசுக்களை பிடித்து அடைத்து வைத்திருந்தார். நீதிபதியிடம் இந்த பாட்டிலைக் காட்டி சிறையில் கொசுக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் தலோஜா சிறையில் உள்ள கைதிகள் அவதிப்படுவதாகவும் கூறினார்.

கோரிக்கையை நிராகரித்து
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கொசு வலையை அனுமதிக்க முடியாது என்று சிறைத்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கொசுவலை பயன்படுத்த அனுமதி அளிக்க முடியாது என்று கூறி லக்டாவாலாவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது. மேலும், கொசுக்கடியை சமாளிக்க ஓடோமாஸ் உள்ளிட்ட வேறு வழிகளை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. லக்டாவாலாவை தவிர வேறு சில கைதிகளும் கொசுவலைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் சிலருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிலருக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications