தமிழகத்தில் பிறந்தவள்.. ஹிந்தியில் பேசும்போது தானாகவே நடுக்கம் வருகிறது.. நிர்மலா சீதாராமன் பேச்சு
மும்பை: ‛‛நான் தமிழ்நாட்டில் பிறந்தவள். எனது கல்லூரி காலத்தில் தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் கடுமையாக நடந்தன. இதனால் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது. தற்போது தயக்கத்துடம், நடுக்கத்துடனும் தான் ஹிந்தி பேசுகிறேன்''என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஹிந்தி மொழி பத்திரிகை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமனை பேச நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அழைத்தார். அப்போது நிர்மலா சீதாராமன் ஹிந்தி மொழியில் பேச வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

35 நிமிட ஹிந்தி பேச்சு
இதையடுத்து மேடையில் நிர்மலா சீதாராமன் பேச துவங்கினார். அப்போது அவர் ஹிந்தி மொழிக்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றியும், ஹிந்தி மொழி அறிவு பற்றியும் கூறினார். மொத்தம் 35 நிமிடங்கள் வரை நிர்மலா சீதாராமன் ஹிந்தி மொழியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் பிறந்தவள் நான்
நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். தமிழ்நாட்டில் தான் கல்லூரி படிப்பை முடித்தேன். எனது கல்லூரி காலத்தில் ஹிந்திக்கு எதிரான கடும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன. அந்த சமயங்களில் ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை இரண்டாவது மொழியாக தேர்வு செய்து நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் கூட மாநில அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்காத சூழல் இருந்தது. இதற்கு பின்னணியில் மொழி தேர்வு தான் இருந்தது.

தயக்கம்-நடுக்கம்
வளர்ந்த பிறகு ஒரு புதிய மொழியை புதிதாக கற்றுக்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் சற்று சிரமமாக இருக்கும். இருப்பினும் நான் எனது கணவரின் தாய்மொழியான தெலுங்கு மொழியை எளிதாக கற்றேன். ஆனாலும் ஹிந்தியை கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது. இதற்கு பின்னணியில் கடந்த கால அனுபவங்கள் இருக்கலாம். இதனால் தான் ஒருவித தயக்கத்துடன் ஹிந்தி பேசுகிறேன். ஏனென்றால் ஹிந்தியில் சரளமாக பேச முடியவில்லை. இதனால் பொதுவாக ஹிந்தி பேசும்போது எனக்கு நடுக்கம் ஏற்படும்.

வாவாஜ்பாய்- நரேந்திர மோடி
இந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த பிரதமராக இருந்த வாஜ்பாய், தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி ஆகியோரின் ஆட்சிகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்
மேலும் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது வளர்ந்துள்ளது. முன்னதாக 1991ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பபட்ட பொருளாதார சீர்த்திருங்கள் என்பது அரைவேக்காடுத்தனமானது. இந்த கொள்கை என்பது பாஜகவின் வாஜ்பாய் பிரதமராகும் வரை எந்த முன்னேற்றமும் அடையவில்லை என காங்கிரஸ் அரசையும் விமர்சனம் செய்தார்.


Click it and Unblock the Notifications
