2 கட்சி உடைந்தும் பலனில்லையே? மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு விழும் சம்மட்டி அடி! பரபர கருத்து கணிப்பு
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும். அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி விஸ்வரூப வெற்றியை பெறும் என பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் தாக்கரே), திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

மறுபுறம் பாஜக தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 38 கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த 2019 ல் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாட்டால் சிவசேனா வெளியே வந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வரான நிலையில் இரண்டரை ஆண்டில் இந்த ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனா 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக தான் சமீபத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 ஆக பிரிந்தது. சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் பாஜகவின் பக்கம் சென்றனர். தற்போது அஜித் பவாரும் துணை முதல்வராகி உள்ளார். இதன்மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 2 அணிகளாக உடைந்துள்ளன. இந்த 2 கட்சிகளும் மகாராஷ்டிராவில் செல்வாக்குடன் உள்ள நிலையில் அந்த கட்சிகள் உடைந்துள்ளன.
இத்தகைய சூழலில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது மகாராஷ்டிராவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' சார்பில் கருத்து கணிப்பு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) கட்சிகள் அடங்கிய ‛இந்தியா' கூட்டணிக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் ‛இந்தியா ' கூட்டணி 36 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி வெறும் 12 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019 தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவுக்கு பெரிய அடியாக உள்ளது. ஏனென்றால் அந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக மட்டும் 23 தொகுதிகளில் வாகை சூடியிருந்தது. ஆனால் தற்போதைய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணியே மொத்தம் 12 இடங்களில் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications