மோடியுடன் “கிரிமினல் போட்டோ”.. செய்தி எழுதிய பத்திரிகையாளர் கொடூர கொலை! சினிமாவை மிஞ்சும் பயங்கரம்
பிரதமர் மோடியுடன் குற்றவாளி படம் என்று செய்தி வெளியிட்ட மராத்தி பத்திரிகையாளர் மறுநாளே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: "பிரதமர் மோடியுடன் குற்றவாளியின் படம்" என்று மராத்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மறுநாளே குற்றவாளி என்று குறிப்பிடப்பட்ட நபரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொழிற்சாலைக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரை கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகாந்த் வாரிஸே. 48 வயதான இவர் மராத்திய செய்தித் தாள் ஒன்றில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். தினசரி தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று வந்த சசிகாந்த் செவ்வாய் கிழமை கார் மோதி கொல்லப்பட்டு உள்ளார்.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சசிகாந்த் சென்றுகொண்டு இருந்தபோது எதிரே மகிந்திரா தார் காரில் வந்த கொலையாளி அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலையாளி கைது
உடனடியாக பத்திரிகையாளர் சசிகாந்தை கொன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை யாருக்கு எதிராக சசிகாந்த் செய்தி வெளியிட்டாரோ அந்த நபராலேயே அவர் கார் மோதி படுகொலை செய்யப்பட்டு இருப்பது மகாராஷ்டிரா மாநில பத்திரிகையாளர்களை கொதிப்படைய வைத்து உள்ளது.

தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
தனது வயதான தாய், மனைவி, 19 வயது மகனுடன் வசித்து வந்த பத்திரிகையாளர் சசிகாந்த், மராத்தி செய்தித்தாளில் பர்சு பகுதியில் அமைந்து இருக்கும் RRPCL எனப்படும் ரத்னகிரி ரிஃபைனரி & பெட்ரோகெமிக்கல் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்து இருக்கிறார்.

பந்தாரிநாத் அம்பேர்கர்
அந்த நிறுவனத்திற்கு அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர். இந்த நிலையில், தான் பணிபுரியும் மஹாநகரி டைம்ஸ் செய்தித்தாளில், "பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருடன் குற்றவாளியின் படம் உள்ளது" என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டு உள்ளார் சசிகாந்த். பிரதமருடன் புகைப்படம் இருப்பதாக கூறப்படும் அந்த நபரின் பெயர் பந்தாரிநாத் அம்பேர்கர்.

மக்களை மிரட்டியதாக வழக்கு
பத்திரிகையாளர் சசிகாந்தின் உயிரை பறித்த அந்த காரை ஒட்டிய கொலையாளி இவர்தான். அவர் மக்களால் எதிர்க்கப்படும் அந்த தொழிற்சாலையின் ஆதரவாளர். அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களையும் விவசாயிகளையும் மிரட்டியதாக அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

காரில் இழுத்துச் செல்லப்பட்ட சசிகாந்த்
பத்திரிகையாளர் சசிகாந்த் கொலை செய்யப்பட்ட செவ்வாய்கிழமை ராஜாபூர் நெஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றபோது அவர் மீது கார் ஏற்றி கொன்று இருக்கிறார் அம்பேர்கர். அவர் மீது மோதியதுடன் சில மீட்டர்கள் சசிகாந்தின் உடலை காரிலேயே இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்து இருக்கிறார் அவர். அப்பகுதி மக்கள் அருகில் செல்வதற்குள் அவர் அங்கிருந்து தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் காவல்
சுயநினைவு இன்றி மயங்கிய நிலையில் கிடந்த சசிகாந்த் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து இருக்கிறார். இதுகுறித்து ரத்னகிரி காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜய் குல்கர்னி தெரிவிக்கையில், அம்பேர்கரை உடனே கைதுசெய்துவிட்டோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி விசாரித்து வருகிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications