சரியா போச்சு! மகாராஷ்டிராவில் வேலையை காட்டிய பாஜக! 20 ஷிண்டே எம்எல்ஏக்களின் Y பிரிவு பாதுகாப்பு வாபஸ்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஷிண்டே சிவசேனா கட்சியின் 20 எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாயுதி கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவடைந்தது முதலே மகாயுதி கூட்டணியில் அதிருப்திதான் தொடர்ந்து வந்தது.

முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுத்தர மறுத்ததால் உத்தவ் தாக்கரே சிவசேனாவுடன் கை கோர்க்க பாஜக தயாரானது. இதனால் வேறுவழியே இல்லாமல் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு பாஜக கூட்டணியிலேயே ஷிண்டே நீடித்தார். அதேபோல மகாராஷ்டிரா அமைச்சரவை ஒதுக்கீட்டிலும் ஷிண்டே சிவசேனாவுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
மகாயுதி கூட்டணி அரசுக்குள் இத்தகைய அதிருப்தி இருந்த போதும் கூட்டணி ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாயுதி கூட்டணிக்குள் இருக்கும் மோதலை அம்பலப்படுத்தும் வகையில் மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. மகாயுதி கூட்டணியின் முக்கிய கட்சியான ஷிண்டே சிவசேனா கட்சியின் 20 எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வந்த Y பிரிவு பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்துறையை தம் வசம் வைத்திருக்கும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஷிண்டே சிவசேனா கடும் கொந்தளிப்பில் இருக்கிறது.
ஆனால் பாஜக தரப்போ, எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலரது பாதுகாப்பும்தான் குறைக்கப்பட்டுள்ளது; அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரது பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது என சமாதானம் சொல்லி வருகிறது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, என்னதான் கூட்டணி ஆட்சி தொடர்ந்தாலும் ஷிண்டே சிவசேனா கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே அமைச்சர் பதவி தொடர்பான மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஷிண்டே சிவசேனாவை கழற்றிவிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனாவும் கைகோர்க்கவும் பாஜக தயாராகவே இருக்கிறது; உத்தவ் சிவசேனா தரப்பும் பாஜகவுடன் தற்போது நட்புறவில்தான் இருந்து வருகிறது. குறிப்பாக ராய்காட், நாசிக் மாவட்டங்களுக்கான அமைச்சர் பொறுப்புகளை ஷிண்டே சிவசேனா எதிர்பார்த்தது; ஆனால் ராய்காட் பொறுப்பை தேசியவாத காங்கிரஸுக்கு கொடுத்தது பாஜக. இந்த புகைச்சல்களுக்கு நடுவேதான் தற்போது தமது அதிகாரத்தைக் காட்டும் வகையில் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏக்களின் Y பிரிவு பாதுகாப்பு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்கின்றன.
மேலும் மகாராஷ்டிராவில் அனைத்து கட்சி அமைச்சர்களுக்கும் மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து Y Plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications