பாஜகவுடன் மல்லுக்கட்டு... உத்தவ் தாக்கரே உக்கிரமானதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவுகதானாம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சமமான அதிகாரப் பகிர்வு நிபந்தனையை மிக பிடிவாதமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்து வருவதற்கு புதிய ஆலோசகர்கள்தான் காரணம் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி 105 மற்றும் 56 தொகுதிகளைக் கைப்பற்றின. இரு கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமமான அதிகாரப் பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய நிபந்தனைகளை சிவசேனா முன்வைத்தது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்க மறுத்தது. இதனால் பாஜக, சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது.

உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை
வழக்கமாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மோதல் போக்கை வெளிப்படுத்தினாலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை பாஜக ஏற்படுத்தி விடும். மத்தியில் 2014, 2019-ல் பாஜக ஆட்சி அமைத்த போதும் முக்கிய துறைகளை சிவசேனா கேட்டு அடம் பிடித்தது.

உத்தவ் தாக்கரே பிடிவாதம்
ஆனாலும் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியது பாஜக. இம்முறை சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தமது நிபந்தனைகளில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்து வருகிறார். அத்துடன் பாஜகவை வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் சாடியும் இருந்தார் உத்தவ் தாக்கரே.

ஆலோசகர்கள் பின்னணி?
இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து பாஜகவால் புதிய அரசு அமைக்க முடியவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள், உத்தவ் தாக்கரே இம்முறை இப்படி பிடிவாதம் காட்டுவதற்கு காரணமே அவரது புதிய அரசியல் ஆலோசகர்கள்தான். தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர், உத்தவ் தாக்கரேவின் ஆலோசகராக இருக்கிறார்.

ஓங்கும் ஆதித்யா கை
சட்டசபை தேர்தலில் 56 இடங்களை பெற்ற சிவசேனா இல்லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. அதனால் நிபந்தனைகளில் உறுதியாக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஆலோசனை கொடுத்தவர்களில் பிரசாந்த் கிஷோரும் ஒருவர் என்கின்றனர். அத்துடன் உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்.எல்.ஏ.வான ஆதித்யா தாக்கரே, அவரது சகாக்கள் வருண் சர்தேசாய், சூரஜ் சவாண் ஆகியோரது ஆலோசனைகளும் மற்றொரு காரணம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

ஆட்சி அமைக்க அழைப்பு
தற்போது பாஜக சட்டசபை குழு தலைவரான தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். பட்னாவிஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் சிவசேனாவின் பிடிவாதம் தொடருமா?தளருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசியவாத காங். நிலைப்பாடு
அதேநேரத்தில் பாஜக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்படி பெரும்பான்மையை பாஜக நிரூபிக்காத நிலையில் புதிய ஆட்சி அமைக்க முயற்சிப்போம் என தேசியவாத காங்கிரஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications