இன்றைய டாடா நிர்வாகிகளுக்கு சண்டையே ஓயல.. ஆனால் நாய்க்கு கூட சொத்தில் பங்கு கொடுத்தவர் ரத்தன் டாடா தெரியுமா
மும்பை: இந்தியாவின் டாப் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவருக்கு நாய்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். இதன் காரணமாகவே தான் உயிரிழந்த பிறகும் தனது செல்ல நாய் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தனது ரூ.10,000 கோடி உயிலில் அவர் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பணத்தை நாய்க்கும் ஒதுக்கியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. 1991ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பதவியேற்ற இவர், அந்நிறுவனத்தைப் பல மடங்கு விரிவாக்கினார். இந்தியாவில் இருந்த டாடா குழுமத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று பல உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

ரத்தன் டாடா
அதேநேரம் வயது மூப்பு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக அவர் பிஸ்னஸில் இருந்து விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. ரத்தன் டாடா மிக சிறந்த தொழிலதிபர் மட்டுமில்லை.. பல சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர். பல தொண்டு நிறுவனங்களுக்கும் நன்கொடை கொடுத்து வந்துள்ளார்.
நாய்கள் மீதான பாசம்
மேலும், அவருக்கு நாய்கள் மீது தனி அன்பு எப்போதுமே இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே டாடா குழுமத்திற்குச் சொந்தமான தாஜ் ஹோட்டல்களில் தெருநாய்களுக்கு இருப்பிடமும் உணவும் வழங்கி பார்த்துக் கொள்வார்கள். மற்ற சிறிய ஹோட்டல்களில் கூட தெரு நாய்களைக் கிட்ட கூட விட மாட்டார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் ரத்தன் டாடா தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தாராம். நாய்கள் ஹோட்டல் முன்பு வந்து அமைதியாக இருந்தால் அதை எதுவும் செய்யக்கூடாது என சொல்லியுள்ளார். மேலும், நாய்களுக்கு உணவுகளையும் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல அவர் தனது வீட்டிலும் அவர் சொந்தமாக டிட்டோ என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் ஒன்றை வளர்த்து வந்தார். ரத்தன் டாடாவுக்கு டிட்டோ வெறுமன வளர்ப்பு நாய் மட்டுமில்லை.. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ரத்தன் டாடாவுக்கு நல்ல ஒரு நண்பனாகவும் வீட்டில் ஒரு துணையாகவும் டிட்டோ இருந்துள்ளது. இதன் காரணமாகவே தனது உயிலில் டிட்டோவிற்கு எந்தக் குறையும் வரக்கூடாது என்பதில் உறுதி காட்டியிருக்கிறார்.
செல்ல நாய்க்கு ரூ.12 லட்சம்
டிட்டோ பராமரிப்புக்காக ரூ.12 லட்சம் ரூபாயை அவர் உயிலில் ஒதுக்கியுள்ளார். தனது சமையல்காரர் ராஜன் ஷாவின் பராமரிப்பில் டிட்டோ இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட அவர், டிட்டோவை பராமரிக்க ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார். தனது நான்கு கால் நண்பனும் கூட தான் இல்லாமல் போனதால் சிரமப்படக்கூடாது என்பதால் இந்த ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறார் ரத்தன் டாடா.
இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.. நாய் எனக்குப் பிடிக்கும் எனச் சொல்லி சிலர் தங்கள் மொத்தச் சொத்தையும் நாய்களுக்கு எழுதி வைப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், அதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால் நாய்களுக்குத் தேவை அன்பும் பாசமும் தானே தவிர சொத்தும் பணமும் இல்லை. இதன் காரணமாகவே பராமரிப்பிற்குத் தேவையான தொகையை மட்டும் கணக்கிட்டு நாய்க்கு எழுதி வைத்திருக்கிறார்.
எல்லாருக்கும் உதவிய ரத்தன் டாடா
இது மட்டுமில்லை தனது வீட்டில் பணி புரிந்தவர்கள், உதவியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், சமையல்காரர், டிரைவர் என அனைவருக்கும் கணிசமான பணத்தை ஒதுக்கியுள்ளார். இப்படி ஊழியர்களுக்கு மட்டும் அவர் ரூ. 3.5 கோடியை ஒதுக்கியுள்ளார். மேலும், பக்கத்து வீட்டுக்காரர் படிப்பிற்கு வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்துள்ளார். இதுபோக தனது ரூ.10,000 கோடி உயிலில் பெரும்பகுதியை அவர் டிரஸ்டிற்கு எழுதி வைத்திருந்தார். இப்படித் தன்னை சுற்றி இருந்த அனைவருக்கும் நல்லது செய்ய நினைத்தவர் தான் ரத்தன் டாடா!


Click it and Unblock the Notifications
