ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா ஓவியம் வாங்க வற்புறுத்தப்பட்டேன் - யெஸ் வங்கி நிறுவனர் திடுக் தகவல்
மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராணா கபூர் கட்டாயத்தின் பேரில் ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா காந்தியிடம் இருந்து எம்எப் ஹூசைன் ஓவியத்தை வாங்கியதாகவும், இதன்மூலம் பத்ம பூஷன் விருது கிடைக்கும் என எதிர்ப்பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பான விபரங்கள் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
யெஸ் வங்கியின் நிறுவனர்களின் ஒருவர் ராணா கபூர். இவர் அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார். பண மோசடி வழக்கில் 2020 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே ராணா கபூர் மற்றும் திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோருடன் சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் பல ஆயிரம் கோடி நிதியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது..

துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
இதுதொடர்பாக ராணா கபூர், அவது குடும்பத்தினர் மற்றும் விளம்பரதாரர்களான கபில் மற்றும் தீரஜ் வாத்வான் உள்பட சிலருக்கு எதிராக சிறப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் அளித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் அவருக்கும் சோனியா காந்தியின் குடும்பத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்து தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தினர்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடி கொடுத்து எம்எப் ஹுசைன் ஓவியத்தை வாங்க ஒப்புக்கொண்டேன். உண்மையில் இது எனது விருப்பத்தின் அடிப்படையில் வாங்கவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. பெட்ரோலிய துறை அமைச்சராக முரளி தியோர் இருந்தார். ஓவியத்தை வாங்கும்படி இவர் தான் என்னை கட்டாயப்படுத்தினார்.

பத்ம பூஷன் விருதுக்காக...
இதை செய்வதன் மூலம் சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாகலாம் எனவும், பத்ம பூஷன் விருது பெற அது உதவும் எனவும் தெரிவித்தார். மேலும் இதை மறுத்தால் அது வங்கியின் செயல்பாடுக்கு சரியானதாக இருக்காது எனவும் கூறினார். ஏனென்றால் அந்த காலத்தில் பத்ம பூஷன் விருதுக்கு நான் தகுதியானவனாக இருந்தேன்.

ரூ.2 கோடி காசோலை
நான் ஓவியம் சேகரிக்கும் நபர் இல்லை. இதனால் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ஓவியத்துக்காக நான் ரூ.2 கோடி காசோலை வழங்கினேன். 2010ல் டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவில் இரவு உணவின்போது முரளி தியோராவை சந்தித்தபோது கட்டாயப்படுத்தப்பட்டேன். இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக முரளி தியோர் பலமுறை என்னை தொடர்பு கொண்டார். நேரில் பார்க்க முயற்சித்தார். நான் தொடர்ந்து விலகி வந்தேன். இருப்பினும் என்னால் அவரை முழுவதுமாக புறக்கணிக்க முடியவில்லை. இதனால் கட்டாயப்படுத்தியதன் அடிப்படையில் பணம் கொடுத்தேன்.

சோனியாவின் சிகிச்சைக்கு...
ஆனால் முரளி தியோரா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த பணத்தை நியூயார்க்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சைக்காக பயன்படுத்தி கொண்டனர். இதன்மூலம் சோனியா காந்தியுடன் நெருக்கமாக இருந்த அகமது படேல் என்னிடம் சோனியா காந்தியின் சிகிச்சைக்கு உதவியதாக குறிப்பிட்டு பாராட்டினார்'' என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications