வெளியாகும் திமுக பைல்ஸ் 3.. தமிழக அரசியலையே புரட்டிப்போடப்போகுது! பூகம்பத்தை கிளப்பிய அண்ணாமலை
நாகப்பட்டினம்: திமுக பைல்ஸ் 3 என்பது 2025ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்போகிறோம். தமிழக அரசியலை புரட்டிப்போடக்கூடிய தன்மை திமுக பைல்ஸ் பார்ட் -3ல் இருக்கும் என்பது எனது தீர்க்கமான நம்பிக்கை. அதனை பார்க்கும்போது சாமானிய மனிதனும் வயிறு எரிந்து தங்களுக்கு வர வேண்டிய பணம் எப்படி முதலைகளுக்கு செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. தற்போது தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதோடு ஊழல், முறைகேடு புகார்களை முன்வைத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி திமுக பைல்ஸ் 1, திமுக பைல்ஸ் 2 என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு மற்றும் அவர்களின் பினாமி நிறுவனங்கள் என்ற விபரங்களை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அந்த வரிசையில் தற்போது அண்ணாமலை திமுக பைல்ஸ் 3-யை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக பைல்ஸ் 3 விரைவில் வெளியிடப்படும் என்றும், அந்த பைல்ஸில் திமுக அரசின் டெண்டர் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் என்றும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:
2025ன் ஆரம்பத்தில் திமுக பைல்ஸ் 3 வெளியிட உள்ளோம். தமிழக மக்களுக்கு மத்திய அரசின் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசை பொறுத்தவரை தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கொடுத்து உள்ளார்கள். மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறார்கள். சராசரியாக 3 - 4 ஆண்டு முடிந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.17 லட்சம் கோடி எப்படி செலவாகி உள்ளது? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
அதெல்லாம் டெண்டர். மத்திய அரசின் டெண்டரை யார் எடுக்கிறார்கள்? நெடுஞ்சாலைத்துறை டெண்டரை யார் எடுக்கிறார்? சத்துணவு டெண்டரை யார் எடுக்கிறார்? எடுப்பவரின் நிறுவனம் என்ன? பெயர் என்ன? எத்தனை முறை டெண்டர் எடுத்துள்ளார்கள்? அவர்களுக்கும், திமுகவில் இருப்பவர்களும் சம்பந்தம் உள்ளதா? கூட்டணி கட்சிகளுக்கு டெண்டர் போய் உள்ளதா? ஆங்காங்கே அட்ஜெட்ஸ்மெண்ட் அரசியல் நடக்கிறதா? ஒரு எம்எல்ஏ தான் டெண்டரை முடிவு செய்வார்களா? இதையெல்லாம் திமுக Part -3 பைல்ஸ் வெட்ட வெளிச்சமாக காட்ட இருக்கிறது. அதேநேரத்தில் கூட்டணி கட்சி அதிலும் குறிப்பாக உள்ள அகில இந்திய கட்சியின் தலைவர் எடுத்துள்ள டெண்டரும் முதலாவதாக வரும்.
எப்படி மாநில அரசின் திட்டங்கள் எல்லாம் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு கிடைக்கிறது என்பதை பார்ட் -3ல் காட்ட போகிறோம். எங்களை பொறுத்தவரை பார்ட் - 1 அரசியல் கட்சி, திமுக தலைவர்கள், பார்ட் - 2 பினாமிகள், பார்ட் 3- மக்கள் வரிப்பணத்தை டெண்டராக கொண்டு வரும்போது அதன்மூலம் ஆதாயம் யாருக்கு செல்கிறது? என்பதை காட்ட உள்ளோம். 2025ம் ஆண்டு ஆரம்பகாலத்தில் பார்ட் -3யை கொண்டு வந்து ஒரு வருட காலம் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும் என்பது எங்களின் ஆசை. அதற்காக முழு தயாரிப்பு வேலையும் முடியும் தருவாயில் உள்ளது. அதனை கிராஸ் செக் செய்து வருகிறோம்.
திமுக பைல்ஸ் 1, திமுக பைல்ஸ் 2 ஆகியவற்றால் திமுகவினர் என் மீது தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கே 1,200 கோடியை தாண்டி உள்ளது. பார்ட் 1, பார்ட் 2வை பொய் என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. பார்ட் 3யும் அதேபோல் இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை. அதற்கு கொஞ்சம் நேரம் வேண்டும். குறிப்பாக தமிழக அரசியலை புரட்டிப்போடக்கூடிய தன்மை திமுகவின் பைல்ஸ் பார்ட் -3ல் இருக்கும் என்பது எனது தீர்க்கமான நம்பிக்கை.
அதனை பார்க்கும்போது சாமானிய மனிதனும் வயிறு எரிந்து தங்களுக்கு வர வேண்டிய பணம் எப்படி முதலைகளுக்கு செல்கிறது. ஒரு மாவட்டத்தில் அமைச்சரின் மச்சான், நெருங்கிய உறவினர்கள், தோழர்கள், அவர்களின் பினாமி நிறுவனங்களுக்கு செல்கிறது. அதில் 30 சதவீத கமிஷன் எடுக்கிறது என்பதை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பார்ட் 3 வழங்கப்பட உள்ளது'' என்றார். பாஜக மாநில தலைவர் ஏற்கனவே திமுக பைல்ஸ் 1, திமுக பைல்ஸ் 2 ஆகியவற்றை வெளியிட்டு இருந்தார். தற்போது பார்ட் 3யை அவர் வெளியிட உள்ளதாக கூறி இருப்பது தமிழக அரசியலை இன்னும் பரபரப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications