வெளுத்து வாங்கும் மழை...வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்கள் - கண்ணீரில் டெல்டா விவசாயிகள்
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் பெருவெள்ளம் காரணமாக பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
நாகப்பட்டினம்: கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுக்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை நாளை அதிகாலை அல்லது இன்று இரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இதனால் டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி தீவிர கனமழை பெய்யும். இன்றும் நாளையும் இந்த 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 8 மாவட்டங்களில் 20 செமீ முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு தீவிர மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை, தென்காசி, விருதுநகர், காஞ்சீபுரம், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 21 மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இங்கு எல்லாம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை இன்றும் நாளையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் 12 முதல் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக குடிநீர் தரமான உணவுகள் வழங்கி அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை, உக்கடை, சாலியமங்கலம், களக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நாற்று நட்டு 20 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்கால் முறையாக பராமரிக்காததால், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதமடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏற்கனவே ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரால் மூழ்கி உள்ளன. ஓரிரு நாட்களில் மழை ஓய்ந்தாலும் விளைநிலங்களில் சூழப்பட்ட தண்ணீர் வடிந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என கவலை தெரிவிக்கின்றனர்.
பாலையூர் பகுதியில் விவசாய நிலம் கடல் போல் காட்சி அளிக்கின்றன. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுகள் மழையில் நாசமாகி மிதந்து வருகிறது இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பருவமழையின் போது தோட்டப்பயிர் சேதமடையாமல் தடுக்க விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை கவனிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை தடுக்க தோட்டத்தில் அறுவடை செய்து மரத்தின் சுமையை குறைத்து, காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும். உபரி நீர் வடிந்த பின் நடவு பணி செய்ய வேண்டும். காற்று வீசும் எதிர் திசையில் செடிகளுக்கு குச்சியால் முட்டுக் கொடுத்தபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மரங்கள் சுற்றி மண் அணைத்து மழை நீர் வடிந்த பின் பயிருக்கு ஏற்ப மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். பட்டுப்போன காய்ந்த மரம் மற்றும் அதன் கிளைகள் பசுமை குடில் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தோட்டப் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 10 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. புதுச்சேரி பாகூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள் இருந்தும் முறைப்படி அதனை சீர் செய்யாததால் விளை நிலங்களில் உள்ள தண்ணீர் வடியவில்லை. இதன் காரணமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications