நடுங்கி நிற்கும் நாமக்கல்.. அரசு பள்ளியில் ஆக்ரோஷ சண்டை.. 2 மாணவர்கள் மோதியதில் ஒருவர் பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 2 மாணவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இதில் 11ம் வகுப்பு படித்த ஆகாஷ் (வயது 16) என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நவலப்பட்டியை சேர்ந்த 16 வயது நிரம்பிய ஆகாஷ் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் தான் இன்று பள்ளியில் திடீரென்று ஆகாசுக்கும், இன்னொரு மாணவருக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் பள்ளியில் வைத்தே தாக்கியுள்ளனர்.
இந்த வேளையில் திடீரென்று ஆகாஷின் தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது. இதனால் சக மாணவர்கள் அலறியதோடு உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆகாசை பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஆகாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதாவது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆகாஷ் இறந்துள்ளார். இதையடுத்து ஆகாசின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் எருமப்பட்டி போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணையை தொடங்கினர்.
அப்போது பள்ளியில் ஆகாசும், இன்னொரு மாணவரும் ஏன் மோதிக்கொண்டனர்? என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். இருப்பினும் இருமாணவர்கள் இடையேயான மோதலுக்கான காரணத்தை போலீசார் இன்னும் வெளிப்படுத்தவில்லை. மேலும் சம்பவம் குறித்த புகாரின் பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அரசு பள்ளியில் இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவர் பலியான செய்தி நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் சமீபகாலமாக பள்ளியில் மாணவர்கள் இடையேயான சண்டை, சாதி ரீதியிலான மோதல், சக மாணவனை கத்தியால் குத்தும் சம்பவம் உள்ளிட்டவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் 2 மாணவர்கள் இடையேயான மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications