டிவி-ல பார்ப்பாரு ஸ்டாலின்.. ‘இப்ப தெரியுதா? எங்க டீம் ரெடி’ ஓவரா சீண்டிய எடப்பாடி.. டென்ஷனான திமுக!
நாமக்கல் : அதிமுக மூன்று, நான்காக உடைந்திருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் இந்தக் கூட்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன், இந்தக் கட்சி ஒன்றாகத்தான் இருக்கிறது, அதற்கு இந்த நாமக்கல் கூட்டமே சாட்சி என சரவெடி வீசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு பகுதியில், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கலந்துகொண்ட அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கடந்த ஜூலை மாதம் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்லில் இதே பொம்மைக்குட்டைமேட்டில் தான் நடைபெற்றது. 10 ஆயிரம் பேர் பங்கேற்ற அந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

ஈபிஎஸ் வேகம்
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக 51-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே இருமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்தப் பொதுக்கூட்டம் தங்கமணியின் ஏற்பாட்டில் இன்று திரளான கூட்டத்தோடு நடந்தது. இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

லெஃப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி
கொங்கு மண்டலத்தைக் குறிவைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவினர். இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கலகலத்துப் போயிருக்கிறது எடப்பாடி அணி. இதனால் அதிர்ச்சியடைந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, இந்த அணி தாவலை தடுக்கும் முயற்சியாகவே, எடப்பாடியை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தார். ஏற்கனவே செயல்வீரர்கள் கூட்டங்களையும் தங்கமணி நடத்தி வருகிறாராம்.

ஸ்டாலின் டிவியில் பார்ப்பார்
இன்று பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எடப்பாடி பழனிசாமி, திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஈபிஎஸ் பேசுகையில், அதிமுக மூன்று, நான்கு பிரிவுகளாக உடைந்திருக்கிறது என்று கூறுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த கூட்டத்தை ஸ்டாலின் டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் கட்சி ஒன்றாகத்தான் இருக்கிறது, அதற்கு இந்த நாமக்கல் கூட்டமே சாட்சி என சரவெடி வீசத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

பொய் மேல் பொய்
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், நீட் தேர்வு ரத்துக்கான ரகசிய திட்டம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்கள் ஆனால் அது என்ன ஆனது? தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன, எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என விமர்சித்தார். மேலும், பெண்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தனர். ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதன் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

திட்டங்களை முடக்கி
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், முதியோர் உதவி தொகை, பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், மினி கிளினிக் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்தி விட்டதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள் ஆனால் அதையும் செயல்படுத்தவில்லை ஆசிரியர்களையும் கோரிக்கைகளையும் கைவிட்டு விட்டனர் என விளாசினார்.

எதிர்க்க முடியாவிட்டால் வழக்கு
திமுகவால், அதிமுகவை எதிர்க்க முடியாத நிலை வரும் போதெல்லாம் அவர்கள் நம் மீது வழக்கு போடுவதுதான் தொடர்கதையாக இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதைத்தான் கடைபிடிக்கிறார்கள். நேரடியாக அதிமுகவை எதிர்க்க தெம்பு, திரானி இல்லாத கட்சி திமுக. அரசியல் ரீதியாக நம்மை அவர்கள் எதிர்கொள்ள முடியாது. ஏதாவது ஒரு கொல்லைப்புறத்தின் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்தப் பார்க்கிறார்கள். அது நிச்சயமாக ஒருபோதும் நடக்காது என்றார் எடப்பாடி.

ஸ்டாலின் அவர்களே.. எங்க படை தயார்
மேலும், முதல்வர் ஸ்டாலின் அவர்களே, எங்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் தினந்தோறும், உங்கள் ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்களுக்கு தொழில்நுட்ப நிர்வாகிகளின் உதவியோடு கொண்டு சேர்த்து வருகிறார்கள். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் தவிடுபொடியாக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ, அதுபோல அதிமுக ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதான் ஆரம்பம்
முதல்வர் ஸ்டாலினின் அதிகாரம் மற்றும் மிரட்டல் காரணமாக, ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர். அதிமுகவுக்கு எந்தளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் இருக்கிறது என்பதை இன்று நடைபெறும் கூட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும் என்பதற்கு சாட்சியாக்தாதான் நாமக்கல்லில் நடைபெறும் இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன் என பரபரவெனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.

சீண்டல்
கடந்த சில நாட்களாக மௌனம் காத்து வந்த எடப்பாடி பழனிசாமி, மீண்டும் திமுகவுக்கு எதிராக சீறத் தொடங்கியுள்ளது திமுக தலைமையை கவனிக்க வைத்துள்ளது. அதுவும் குறிப்பாக, ஸ்டாலினை குறிப்பிட்டே, அவருக்கு சவால் விடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி பேசியதை அதிமுக தொண்டர்கள் வெகுவாக ரசித்துள்ளனர். இதனால், திமுக தரப்பு சீண்டப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையின் சார்பில் விரைவில் பதிலடி கிடைக்கும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications