இஸ்ரேலின் நோக்கம் ஹமாஸ் அழிப்புதானே ஒழிய, இனப்படுகொலை அல்ல.. மவுனம் கலைத்த எலான் மஸ்க்
நியூயார்க்: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்திருக்கும் நிலையில், சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து எலான் மஸ்க் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது.

எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.
ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி 35வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 4,412 பேர் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை 2,641.
ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேபோல இந்த தாக்குதலிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எகிப்தின் ராஃபா எல்லை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போர் குறித்து உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேன் நடத்திய யூடியூப் நேர்காணலில் மஸ்க் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நேர்காணலில், "இஸ்ரேல் மற்றும் காஸாவில் தற்போதைய போர் எப்படி முடிவுக்கு வரும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?" என்று லெக்ஸ் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இஸ்ரேலின் ஆக்ரோஷத்தை தூண்டுவதே ஹமாஸின் குறிக்கோள். ஹமாஸ் உறுப்பினர்களைக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது என்பது இஸ்ரேலின் நடவடிக்கை. அது தொடர வேண்டும். இல்லையெனில் ஹமாஸ் பெரிய அளவில் வளர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல பாலஸ்தீனத்தில், காசாவில் குழந்தைகளை கொல்வது என்பது இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் படைகளை உருவாக்குவதற்கு சமமாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஏராளமான ஹமாஸ் படையினர் உருவாவார்கள்.
இஸ்ரேலின் நோக்கம் ஹமாஸ் அழிப்புதானே ஒழிய, இனப்படுகொலை அல்ல. அதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். எனவே காசாவுக்குள் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவத் தேவைகளை அனுமதிக்க வேண்டும். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இருக்கக்கூடாது. அப்படிதான் இந்த போரை நடத்த முடியும். இஸ்ரேல், ஹமாஸ் படையினரை கொல்லும் போது அது அத்துடன் முடிந்துவிட்டால் இஸ்ரேல்தான் இந்த போரில் வெல்லும். ஆனால் இதே கொல்லப்படும் ஒவ்வொரு ஹமாஸ் படையினருக்கும் ஏராளமான வீரர்கள் சண்டையிட முன்வந்தால் நீங்கள் தோற்றுகொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே காசாவில் இணையம் துண்டிக்கப்பட்டபோது ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையம் வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications