தீப்பெட்டிக்கு தடை..! வரதட்சணைக்கு தடா..! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கிராமம்
உதகை: நீலகிரியில் வாழும் கோத்தர் இன பழங்குடி மக்கள் இப்போது தங்கள் கலாச்சாரம் மாறாமல் வரதட்சணை முறைக்கு எதிரான பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வரதட்சணை வாங்காத ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். அமெரிக்காவில் குடியேறினாலும் அங்கே உள்ள இந்தியர்கள் ஜாதி பார்த்தும், பெரிய அளவில் வரதட்சணை கேட்டு வாங்கிக் கொண்டுதான் திருமணம் செய்து கொள்கிறார்கள். வரதட்சணை என்பது படித்தவர்கள் கூட ஏற்றுக் கொண்ட ஒரு சர்வசாதாரணமான நடைமுறையாகிவிட்டது. அது குற்றம் என்பது சட்டப் புத்தகத்தில்தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லை.

சிலர் ஆடம்பர கல்யாணத்தை வீடியோ எடுத்துப் போட்டு வரதட்சணையாகக் கொடுக்கப்படும் பொருட்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். அதை மக்களும் ரசித்துப் பார்க்கிறார்கள். ஆக, வரதட்சணையை ஒழிப்பது என்பது இந்தத் தலைமுறையில் சாத்தியமில்லை. வருங்காலத்திலும் தடுக்கப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ஆனால், இதே தமிழ்நாட்டில்தான் வாழும் மக்கள் வரதட்சணை என்ற வாசனையைக் கூட அறியாமல் வாழ்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலா? ஆம்! நீலகிரியில் உள்ள கோக்கல் என்ற மலைக் கிராமத்தில் வாழ்ந்துவரும் கோத்தர் பழங்குடி மக்கள் ஆதிகாலம் தொட்டே வரதட்சணை வாங்காமல்தான் மணம் புரிந்து கொள்கிறார்கள். இந்தக் கிராமம் கொடைக்கானலிருந்து 35 கிமீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கே வசிக்கும் இந்த மக்கள் மொழியில் தமிழுடன் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய சொற்கள் கலந்துள்ளன. மலைப் பகுதி என்பதால் இந்த மாநிலங்களுடன் இந்த மக்களுக்குத் தொடர்பு இருக்கிறது. ஆகவே, அந்த மொழிச் சொற்கள் கலந்துவிட்டன. கோக்கல் கிராமத்தில் பிரதான தொழில் விவசாயம்தான். கேழ்வரகு, சாமை ஆகியவற்றைப் பயிர் செய்து வருகின்றனர். கோதுமையைப் போன்று காஞ்சி என்ற ஒரு பயிரை விளைவித்து வந்துள்ளனர். அதில் 3 வகையான காஞ்சி இருந்துள்ளது. அதை இப்போது யாரும் விதைப்பது இல்லை. காலப் போக்கில் அது காணாமல் போய்விட்டது என்கிறார் ஒரு பெரியவர் சந்திர காடி.
அதேபோல் இங்கே யாரும் வரதட்சணைக் கேட்கமாட்டார்கள் என்கிறார் பாட்டி சிங்காரி மாலா. இந்த மக்கள் சிவ வழிபாடு கொண்டவர்கள். லிங்க வழிபாடு கொண்டவர்கள். இந்த ஏழு கிராமங்கள் முழுக்க ஒருவகையான கோத்தர் பழங்குடி மக்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள். வேறு நபர்கள் கிடையாது. ஊர் திருவிழாவின் போது வெளியே இருந்து வரும் பேருந்தைக்கூடத் தடைபோட்டுவிடுவார்கள். ஏனெனில் தீட்டு ஏற்றுபட்டுவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த மலைவாழ் மக்களின் உள்ள பெண்கள் கொண்டையில் ஒரு குண்டுமணி போல் ஒரு ஆபரணத்தை அணிந்துள்ளனர். அதைப் போட்டுக் கொண்டுதான் கணவருக்குச் சாப்பாடு போடவேண்டுமாம். இல்லை எனில் யாரும் சாப்பிடமாட்டார்களாம்.
இங்கே உள்ள மலைக்கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் பழங்குடி வெள்ளை உடையை அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிறார்கள். பேண்ட், ஷர்ட் போட்டுப் போக அனுமதி இல்லை. அதை ஊர் மக்கள் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர். இந்தக் கோத்தர் கோயிலுக்கு என்று ஒரு பட்டி உள்ளது. அதில் இந்த கிராமத்தில் வாழ்ந்த முன்னோர்கள் பசுக்கள் அடைத்து உள்ளனர். இப்போது மாடு வளர்ப்பு சுத்தமாகக் குறைந்துவிட்டது.
ஒவ்வொரு வீட்டிலும் ஆறு, ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர். பலரும் இன்று படித்து நல்ல வேலையில் உள்ளனர். ஆனாலும் இத்தனை பிள்ளைகளுக்கும் வரதட்சணை முறை இருந்தால் தாங்கள் கல்யாணமே செய்து வைத்திருக்க முடியாது என்கிறார் ஒரு பாட்டி.
இங்கே உள்ள சிவனை வழிபட வேண்டி விளக்கு ஏற்றுவதற்கு தீப்பெட்டி பயன்படுத்துவதில்லை இந்த மக்கள். அப்படிச் செய்வது தெய்வ குற்றம் என்பது இவர்களின் நம்பிக்கை. பழங்கால முறையில் இரண்டு கற்களை உரசி அதில் வரும் தீப் பொறியைக் கொண்டே விளக்குப் போடுகிறார்கள். இந்தக் காலத்தில் நடை, உடை, கலாச்சாரம் எதிலும் மாற்றம் வந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள் இந்தக் கோத்தர் இன மக்கள்.












Click it and Unblock the Notifications