வங்கி கடன்! விவசாயிகளுக்கு வழங்காமல் தெரிந்தவர்களுக்கு வழங்கி மோசடி! ஊட்டியில் வசமாக சிக்கிய அதிகாரி
நீலகிரி: ஊட்டியில் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கியதில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். வங்கி கடனை விவசாயிகளுக்கு வழங்காமல் தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வங்கி அதிகாரி ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். வங்கி அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் குமார் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வங்கியில் ஜூனியர் அதிகாரியாக பணி செய்து வந்தார். சொந்த ஊர் சென்னை என்பதால், சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு இருந்தார். அதன்படி தற்போது அவருக்கு பணி மாறுதலுக்கு ஒப்புதல் கிடைத்தது.

விவசாய கடன் வழங்கியதில் மோசடி
இதையடுத்து வேறு வங்கிக்கு செல்ல தயாராக இருந்தார். இந்த நிலையில் செந்தில் குமார் பணியாற்றிய வங்கியில் தணிக்கை பணி நடந்தது. இந்த தணிக்கை பணியின் போது ரூ.8 லட்சம் செந்தில் குமார் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. அதாவது, மானியத்துடன் கூடிய விவசாயக் கடன் வழங்கும் பிரிவில், மானிய தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதில் முறைகேடு செய்திருப்பதாக கூறப்பட்டது.
பயனாளிகளான விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தினை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்காமல், செந்தில் குமார் தனக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி பின்னர் அந்த பணத்தை கையாடல் செய்திருந்தது தெரியவந்தது. இதன்பின்னர் வங்கி ஜூனியர் அதிகாரி செந்தில் குமாரி முழு பணியினையும் தணிக்கை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நடத்திய விசாரணையில் மொத்தம் ரூ.7,99,146 மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.8 லட்சம் மோசடி
இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன் குமார், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கியதில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வங்கி அதிகாரி செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வங்கி அதிகாரி செந்தில் குமார் இந்த ஒரு மோசடியில் தான் ஈடுபட்டாரா இல்லை இதேபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications