பசுவை வேட்டையாடிக் கொன்று காவல் காக்கும் புலி.. ஊட்டியில் அட்டகாசம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
நீலகிரி : ஊட்டியில் வனப்பகுதியை ஓட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் புலி ஒன்று, மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளை வேட்டையாடித் தின்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்தப் புலி, ஊட்டி எச்.பி.எஃப் பகுதியில் ஒரு பசுவைக் கொன்று தின்ற நிலையில், அடுத்த நாளும் அதனை உண்பதற்காக மீண்டும் அங்கு வந்துள்ளது.
ஒரு சிறு புதர் அருகே பசு மாட்டை வேட்டையாடிக் கொன்று போட்டிருக்கும் புலி அதையே சுற்றிச் சுற்றி வருகிறது.
குடியிருப்புப் பகுதியையொட்டி புலி நடமாடி வருவதால், அதனைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
யானையை வம்புக்கு இழுத்த புலி.. அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்.. எடுத்தது பாருங்க ஓட்டம்!

நீலகிரி எச்.பி.எஃப்
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் ஃபேக்டரி அருகே ஓசிஎஸ் காலனி பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி கடந்த இரண்டு மாதங்களாக குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்கள் அருகே உலா வந்து கொண்டிருக்கிறது. வனப்பகுதிக்கு அருகே உள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் வளர்ப்பு எருதுகள் மற்றும் பசு மாடுகளை வேட்டையாடி கொன்று வருகிறதாம்.

சுற்றி வளைத்த புலி
கடந்த இரு நாட்களுக்கு முன்பு வனப்பகுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த பசு மாட்டை புலி தாக்கிக் கொன்று அதன் உடலை தின்று தீர்ப்பதற்காக அடுத்த நாளும் அங்கு வந்துள்ளது. இரையை உண்பதற்காக அப்பகுதியில் உள்ள வனப்பகுதியிலேயே புலி முகாமிட்டிருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஷாக் வீடியோ
ஊட்டியில் கடந்த இரண்டு மாதங்களாக 3 கால்நடைகளை வேட்டையாடிய இந்தப் புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் வனப்பகுதியின் அருகே மூன்று இடங்களில் அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். அந்த கண்காணிப்புக் கேமராவில் தான் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

கண்காணிப்பு தீவிரம்
எச்.பி.எப் வனப்பகுதியை ஒட்டி குளிச்சோலை, ஆர்.சி காலனி என குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கூடுதலாக 10க்கும் மேற்பட்ட அதிநவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் கொண்டுவரப்பட்டு எச்.பி.எஃப் பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எச்சரிக்கை
புலி அச்சுறுத்தல் நிலவுவதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதியின் அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் மூன்றாவது நாளாக வனத்துறையினர் சார்பில் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.