ஆ.ராசாவும் அப்படி பேசினார்.. லாலுவும் சொல்றாரே.. 2024 தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி எங்கே இருப்பார்?
பாட்னா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேறுவார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியிருந்தார். தற்போது அதே கருத்தை மூத்த அரசியல் தலைவரான லாலு பிரசாத் யாதவும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை, ஜாமீனில் விடுதலையான நிலையில் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்டவைகளால் லாலு பிரசாத் யாதவின் அதிரடி பேச்சுகளும் அரசியலும் அதிகம் களத்துக்கு வருவது இல்லை. அண்மையில் 26 எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கூட்டங்களில் பங்கேற்கும் லாலு பிரசாத் யாதவ், வழக்கமான பேச்சுகளில் கவனம் ஈர்த்து வருகிறார். ராகுல் காந்தியின் திருமணம் குறித்த கிண்டல், பிரதமர் மோடிக்கு பிரியா விடை தருவோம் என்கிற பேச்சுகள் ஆகியவற்றை சொல்லலாம்.

மோடி வெளிநாடு செல்ல திட்டம்?: இப்பின்னணியில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லாலு பிரசாத் யாதவ் அதிர வைக்கும் வகையில் பேசியதாவது: பிரதமர் மோடி, பதவியில் இருந்து விலக விரும்புகிறார் போல.. பிரதமர் மோடி பல வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஓய்வை சுகமாக அனுபவிக்கத்தான் பிரதமர் மோடி நாடு ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் போல. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி வெளிநாடு ஒன்றில் குடியேறி விடுவார். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
ஆ.ராசா பேச்சு: அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பியுமான ஆ.ராசா, கருணாநிதி நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறும். அந்த கூட்டத்துக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குவார். அதில் இந்தியாவின் பிரதமர் இருப்பார். 10க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்று கலைஞர் வாழ்க என முழக்கமிடுவர். அப்போது இந்தியாவிலேயே மோடி, அமித்ஷாக்கள் இருக்க மாட்டார்கள். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம் என கூறியிருந்தார். அதாவது லோக்சபா தேர்தலுக்குப்பின்னர் பிரதமர் மோடி, அமித்ஷா வெளிநாட்டுக்கு சென்றுவிடுவர் என ஆ.ராசா பேசியிருந்தார்.
தற்போது ஆ.ராசாவின் கருத்தை அப்படியே லாலு பிரசாத் யாதவும் வெளிப்படுத்தி, பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு போய்விடுவார் என பேசியிருக்கிறார். எதிர்க்கட்சிகளான திமுக, ஆர்ஜேடி தலைவர்கள் தொடர்ந்து இதே கருத்தை பேசி வருவது டெல்லி அரசியலில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications