வெற்றியை தீர்மானிக்கும் சாதிகள்.. எந்த கூட்டணிக்கு எந்த சாதிகளின் ஆதரவு அதிகம்? பீகார் நிலவரம்
பாட்னா: வழக்கமாக பிராமணர்கள் உள்ளிட்ட உயர் சாதிகள் பாஜகவுக்குதான் ஆதரவளித்து வருகிறார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களின் பெரும்பாலான ஆதரவு நிதிஷ்குமாருக்குதான் இருக்கிறது. இருப்பினும் பீகாரில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் யாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு எப்போதும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குதான்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜக உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பாஜகவின் பலம்
பீகாரில் சாதி வாக்கு வங்கிதான் வெற்றியை தீர்மானிக்கின்றன. உயர் சாதியினர் பெரும்பாலும் பாஜகவுடனும், யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC), மகா தலித்துகள், மற்றும் பஸ்மண்டா அல்லது ஒடுக்கப்பட்ட சாதி முஸ்லிம்கள் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடனும் உள்ளனர். இவர்கள் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பலமாக இருக்கின்றனர். இது தவிர லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் மஞ்ச் போன்ற சிறிய கட்சிகள் இந்த கூட்டணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
அப்படியே மறுபுறம் பார்த்தால், முஸ்லிம்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான யாதவர் சமூகம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை உள்ளிட்ட கட்சிகள் பக்க பலமாக இருக்கின்றன.
ஆர்ஜேடியின் பலம்
என்னதான் சாதி வாக்குகள் பலமாக இருந்தாலும், கூட்டணிகளுக்கு பலவீனமும் இருக்கத்தான் செய்கிறது. என்டிஏ கூட்டணியில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, நிதிஷ்குமார்தான். இரண்டு விஷயங்களுக்காக நிதிஷ்குமார் பலவீனமாக பார்க்கப்படுகிறார். முதல் விஷயம் அவர் நீண்ட கால முதல்வராக இருப்பதுதான். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் முதல்வராக தொடர்கிறார் எனில், அவர் மீது நிச்சயம் மாநில மக்களுக்கு அதிருப்தி இருக்கும். நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகள் முதல்வராக நீடிக்கிறார். எனவே நிதிஷ் மீதான அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் வாக்குகளாக மாறிவிடக்கூடாது.
அதேபோல நிதிஷ்குமார் உடல்நல ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறார். அவரால், சுயமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடிவதில்லை. அவரை ஒரு குழு கட்டுப்படுத்துகிறது. அந்த குழுதான் இந்த முடிவுகளை எடுக்கிறது என்று வரும் விமர்சனங்கள், பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவின் பலவீனம்
பாஜகவைப் பொறுத்தவரை, அதன் மூத்த தலைவரான சுஷில் குமாரின் மறைவுக்குப் பிறகு, மாநில அளவில் வலுவான தலைமை இல்லாதது அதன் அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான முகம் என்றாலும், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி ஆர்ஜேடியிலிருந்து வந்தவர் என்பதும், மற்ற தலைவர்களுக்கு சுஷில் குமாரின் வலிமை இல்லாததும் அமைப்பு ரீதியான ஒற்றுமையில் குறைபாடுகளைக் காட்டுகிறது. எனவே, ஆளும் கூட்டணியான என்டிஏ, பெண்களின் வாக்குகளை பெரிதும் நம்பியுள்ளது.
பெண்களின் வாக்குகளை கவர, நிதிஷ்குமார் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு பெண் பயனாளிகளுக்கும் ₹10,000 வழங்கும் முதலமைச்சர் மகளிர் ரோஜ்கர் யோஜனா போன்ற திட்டம், உள்ளூர் நலப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவை பெண்களின் வாக்கு வங்கியை குறி வைத்து செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.
லாலு பிரசாத் கட்சியின் பலவீனம்
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு இப்படி ஒரு பிரச்சனை எனில், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சி, இரண்டு அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. முதல் பிரச்சனை லாலு பிரசாத் ஆட்சியின் செயல்பாடுகள்தான். கடந்த 20 ஆண்டுகளாக ஆர்ஜேடி ஆட்சியில் இல்லை என்றாலும், ஆட்சியில் இருக்கும்போது, அந்த ஆட்சி கட்டு தர்பாராக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இப்போது வரை, இதே மனநிலையில்தான் ஆர்ஜேடியை மக்கள் பார்க்கிறார்கள்.
இரண்டாவது பிரச்சனை, ஆர்ஜேடி ஆட்சியல் மக்கள் எதிர்கொண்ட கடுமையான நிர்வாகக் குறைபாடுதான். இது இரண்டும் ஆர்ஜேடி கட்சிக்கும், அது சார்ந்துள்ள இந்தியா கூட்டணிக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல என்னதான் முஸ்லீம்கள் மற்றும் யாதவர் வாக்குகள் ஆர்ஜேடி கட்சிக்கு இருந்தாலும், கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வரும் அளவுக்கு அதன் பலம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த தேர்தலிலும் கட்சி வெற்றிப்பெற தவறினால், ஆர்ஜேடி எனும் கட்சி எதிர்காலத்தில் இருப்பதே கேள்விக்குறியாகிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications