முதல்வர் பதவியை தூக்கி கொடுத்தோமே- சரியான பச்சை துரோகம்... நிதிஷ்குமார் மீது பாஜக கடும் அட்டாக்
பாட்னா: 2020 சட்டசபை தேர்தலில் குறைவான இடங்களில் ஜேடியூ வென்ற போதும் முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு வழங்கினோம்; இப்போது பாஜகவுக்கும் பீகார் மக்களுக்கும் நிதிஷ்குமார் துரோகம் செய்துவிட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளது பாஜக.
Recommended Video
பீகார் 2 ஆண்டுகளாக நீடித்த பாஜக- ஜேடியூ ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொள்வதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். அத்துடன் மாநில ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார் நிதிஷ்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட ஜேடியூவுக்கு காங்கிரஸ்-ஆர்ஜேடி-இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஆதரவு கொடுத்தது. இந்த கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு நிதிஷ்குமார் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ஆளுநர் பாகு சவுகானை மீண்டும் சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார். தமக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்திருக்கும் கடிதத்தையும் ஆளுநரிடம் கொடுத்தார் நிதிஷ்குமார். இதனடிப்படையில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமாரை ஆளுநர் அழைக்க இருக்கிறார். அப்படி ஆளுநர் அழைத்தால் நாளை பாட்னாவில் புதிய முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பார்.
இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைகளை பாஜக மிகக் கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்துள்ளது. நிதிஷ்குமாரின் இந்த நிலைப்பாடு தொடர்பாக பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: 2020 சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று ஜேடியூ-பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தது. மக்கள் பாஜக-ஜேடியூ கூட்டணிக்கே வாக்களித்தனர். அத்தேர்தலில் ஜேடியூ குறைவான இடங்களைப் பெற்ற போதும் நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவியையே வழங்கினோம். இப்போது பாஜகவுக்கும் வாக்களித்த பீகார் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார் நிதிஷ்குமார். இவ்வாறு சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறினார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மீண்டும் வெளியேறி இருக்கிறார் நிதிஷ்குமார். 40 ஆண்டுகளில் 5-வது முறையாக கூட்டணியை மாற்றி இருக்கிறார் நிதிஷ். வாக்களித்த பீகார் மக்களை அவமானப்படுத்திவிட்டார் நிதிஷ்.
இதனிடையே நிதிஷ்குமாரின் இந்த முடிவுக்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் இதனை வரவேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications
