கல்வான் மோதலில் உயிரிழந்த.. ராணுவ வீரரின் தந்தை கைது.. தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு
நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்து தனது மகனின் நினைவாக அவரது தந்தை ராஜ்கபூர் சிங் தனது வீட்டுக்கு அருகே ஒரு சிறிய நினைவு இல்லத்தை எழுப்பினார்.
பாட்னா: லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் தந்தையை போலீஸார் கைது செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை கைது செய்வதற்கு முன், முதியவர் என்றும் பார்க்காமல் அவரை போலீஸார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பிற ராணுவத்தினரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அம்மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வானில் வீரமரணம்
இமயமலையை ஒட்டியுள்ள லடாக்கில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீனப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் சீனப் படையைச் சேர்ந்த 38 பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மகனுக்காக நினைவு இல்லம்
இவர்களில் பீகாரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெய் கிஷோரும் ஒருவர். இந்த சூழலில், நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்து தனது மகனின் நினைவாக அவரது தந்தை ராஜ்கபூர் சிங் தனது வீட்டுக்கு அருகே ஒரு சிறிய நினைவு இல்லத்தை எழுப்பினார். இந்த நினைவு இல்லம் அமைந்துள்ள ஒரு பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்றும், இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ள தங்கள் வயலுக்கு செல்வது கடினமாக இருப்பதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக ராஜ்கபூர் சிங்கிடம் அவர்கள் கூறியபோது, அவர்களை அவர் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

தரதரவென இழுத்து சென்ற போலீஸார்
இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் நேற்று முன்தினம் அங்கு வந்த போலீஸார், அந்த நினைவு இல்லத்தை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கூறி சென்றனர். இந்நிலையில், இன்று காலை ராஜ்கபூர் வீட்டுக்கு திடீரென வந்த போலீஸார், அவரை அப்படியே தரதரவென இழுத்துச் சென்றனர். ஒருகட்டத்தில் நடக்க முடியாமல் அவர் கீழே விழுந்த போதும் அவரை போலீஸார் சாலையில் இழுத்துச் சென்றனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போராட்டம்
இதுகுறித்து ராஜ்கபூரின் மகன் நந்த் கிஷோர் சிங் கூறுகையில், "ஏதோ தீவிரவாதியை கைது செய்வதை போல எனது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். முதியவர் என்று கூட பாராமல் அவரை இழுத்துச் சென்றதோடு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் அவரை அடித்துள்ளனர்" என்றார். இந்நிலையில், ராஜ்கபூரை போலீஸார் இழுத்துச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் போலீஸாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications