பாஜகவுக்கு நிதிஷ்குமார் போட்டு தந்த செம்ம ஸ்கெட்ச்..பீகாரில் இதுதான் நடக்குமாம்..லாலு செக் வைப்பாரா?
பாட்னா: பீகார் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பாஜகவுடன் மீண்டும் கை கோர்க்க தயாராகிவிட்ட நிதிஷ்குமார் அடுத்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
பீகார் சட்டசபைக்கு 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் முதல்வரானார் நிதிஷ்குமார். அவரது ஜேடியூவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தது.

ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி: ஆனால் 2022-ல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜேடியூ வெளியேறி லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார். தற்போது "வேதாளம்" மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக பாஜக கூட்டணிக்கே நிதிஷ்குமார் திரும்ப முடிவு செய்துவிட்டாராம்.
"இந்தியா" கூட்டணி மீது கோபம்: தாம் உருவாக்கிய "இந்தியா" கூட்டணியில் தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை; ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கவில்லை என்கிற கோபத்தில்தான் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப முடிவெடுத்துவிட்டாராம். இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரித்திருக்கிறாராம் நிதிஷ். மேலும் நிதிஷ்குமாரை கடுமையாக எதிர்க்கும் பீகார் மாநில பாஜக தலைவர்களை சமாதானப்படுத்தவும் பாஜக மேலிடத்தைக் கேட்டுக் கொண்டாராம் நிதிஷ்.
பாஜகவின் ஆலோசனைகள்: இதனடிப்படையில் பீகார் மாநில பாஜக தலைவர்கள் குறிப்பாக நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிக்கும் சுஷில் மோடி உள்ளிட்டோரை டெல்லி மேலிடம் அழைத்துள்ளதாம். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை பீகார் பாஜக தலைவர்கள் சந்தித்து நிதிஷ்குமாரின் மீள்வரவு குறித்து ஆலோசிக்க உள்ளனராம். அதேநேரத்தில் ஜேடியூவின் 43 எம்.எல்.ஏக்களையும் பாட்னாவுக்கு வந்து சேரவும் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
என்ன செய்ய திட்டமிட்டுள்ளார் நிதிஷ்குமார்?: பாட்னாவில் நடைபெற உள்ள ஜேடியூ எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலில் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம் நிதிஷ்குமார். அத்துடன் பாஜகவுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சி அமைப்பது என்பது நிதிஷ்குமாரின் அடுத்த திட்டமாம். அப்படி புதிய ஆட்சியை பாஜகவுடன் அமைத்த சில நாட்களில் சட்டசபையை- ஆட்சியை கலைக்க பரிந்துரைத்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை சந்திப்பது எனவும் திட்டமிட்டுள்ளாராம் நிதிஷ்குமார்.
லாலுவின் ஆட்டம் இருக்குமா?: ஆனால் நிதிஷ்குமாரின் ஜேடியூ எம்.எல்.ஏக்களில் 14 பேர் ஏற்கனவே லாலுவின் ஆர்ஜேடிக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். இதனால் நிதிஷ்குமார் போட்டு வைத்திருக்கும் ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகுமா? லாலு பிரசாத் யாதவும் அவரது மகன் தேஜஸ்வி யாதவும் அரசியல் ஆட்டத்தை ஆட்சி நிதிஷ்குமாரை கதறவிடப் போகிறார்களா? என்பதுதான் தேசிய அரசியலின் எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications