பெரம்பலூரில் சிறுமிக்கு காதல் தொல்லை... தட்டிக்கேட்ட தந்தை மீது வெடிகுண்டு வீசிய இளைஞர் கைது
பெரம்பலூர் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த இளைஞரை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்: பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்த இளைஞரை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வீசிய இளைஞரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.
போலீசில் சிக்கிய நபரின் பெயர் தனபால் என்பதாகும். இவர், பெரம்பலூர் அரியலூர் சாலையில் 4 ரோடு அருகேயுள்ள கவுள்பாளையம், கலை நகரில் வசிக்கும் ராஜ் என்பவரின் மகனாவார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார்.
பெரம்பலூரை அடுத்த கவுல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரம்பலூர்-அரியலூர் பிரதான சாலையில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இதன் அருகே உள்ள மலை அடிவாரப்பகுதியில் வசித்துவருபவர் ஏழுமலை. கல் உடைக்கும் தொழிலாளி.

பெற்றோரிடம் புகார்
இவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். 14 வயதான சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார் மெக்கானிக் தனபால், தினசரியும் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்துவந்துள்ளார். தனபால் தொடர்ந்து தொந்தரவு செய்யவே இது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார் சிறுமி.

கண்டித்த பெற்றோர்
இதனையடுத்து தனபாலின் உறவினர் செல்வத்திடம் கூறி தனபாலை கண்டித்துள்ளார் ஏழுமலை. மேலும் தனபாலை, ஏழுமலை குச்சியால் தாக்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் திருமலை, ஆகியோர் தனபால் வீட்டிற்கு சென்று தனபாலை கண்டித்துள்ளனர்.

நாட்டு வெடிகுண்டு வீச்சு
அப்போது தனபால் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டுவெடிகளை ஏழுமலை மற்றும் திருமலை மீது வீச முயன்றுள்ளார். அதனை தனபாலின் உறவினர் நந்தகுமார் தடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏழுமலை பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார்.

தனபால் கைது
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 நாட்டு வெடிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தனபாலுக்கு நாட்டு வெடிக்குண்டு கொடுத்தது யார், எங்கிருந்து வாங்கி வந்தார் இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications