புதுச்சேரி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு... 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்
புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி: ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவு, குறைவான கல்விக்கட்டணம் போன்றவைகளினால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. மக்கள் புதிய இயல்பு வாழ்க்கையைப் பழகத் தொடங்கினர்.
கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதித்தது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்விச் சூழல் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. பள்ளி அளவில் ஏராளமான இடைநிற்றலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கட்டுப்பாடுகள்
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியது. இதை அடுத்து மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நகர்புற மாணவர்களைப் போல கிராமப் புற மாணவர்கள் ஆன்லைன் கல்வியை முறையாக அணுக முடியாத சூழலில் முற்றிலும் கல்வியிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.

ஆல்பாஸ் அறிவிப்பு
கடந்த 2020ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு கொரோனா அலை தீவிரமாக வீசவே 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.

பாடங்கள் முடிக்கவில்லை
இந்த ஆண்டில் ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலம் கல்வி கற்றுவருகின்றனர். எனினும் மாணவர்களுக்கு முழு பாடங்களும் நடத்தி முடிக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை
இந்தநிலையில், புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவு, குறைவான கல்விக்கட்டணம் போன்றவைகளினால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு முன்பே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications