'நல்ல நாள்.. நல்ல நேரம் பார்த்து'.. நமச்சிவாயம் ஒரேபோடு.. 'சாமி'யின் முடிவு என்ன!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பேச்சுவார்த்தை தேதியை சொல்வார். அமைச்சரவை பங்கீடு குறித்து முதலமைச்சருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம். பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே எந்த வித குழப்பமும் இல்லை என பாஜக தலைவர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மாதம் 7-ந் தேதி முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று பாதித்தால் சிகிச்சைக்கு சென்றார். மேற்கொண்டு அமைச்சர்கள் பதவியேற்பு வைபவம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்டிருக்கிறதாம். இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது. துணை முதல்வர் என்ற பதவியே புதுவையில் கிடையாது என்றும் ரங்கசாமி கூறினார். அதற்கு பாஜக தரப்பு அதை மத்திய அரசு மூலம் திருத்தம் செய்து கொண்டு வருகிறோம் என்று கேட்டது ஆனால் ரங்கசாமி சம்மதிக்கவில்லை. இதனால் அமைச்சர்கள் யார் யார் என்பதில் முடிவு வரவில்லை.

என்ஆர் காங் பிடிவாதம்
இதையடுத்து சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவியை பாஜக தரப்பு கேட்டதாம். 2 அமைச்சர்கள் பதவி மட்டும்தான் தருவோம்; சபாநாயகர் பதவி எங்களுக்குதான் எனவும் என்.ஆர். காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதனால் என்.ஆர். காங்கிரஸை வழிக்கு கொண்டு வர பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அமைச்சர் பதவிகள்
தற்போது ரங்கசாமி பாஜகவின் நெருக்கடிக்கு பணிந்து சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ன. இதன் மூலம் புதுச்சேரியில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவை பதவியேற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சுமூக முடிவு
ஊடகங்களில் பரவும் செய்திகள் குறித்து பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நமச்சிவாயம் கூறுகையில், பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே எந்த வித குழப்பமும் இல்லை என்றும் அமைச்சரவை பங்கீடு குறித்து முதலமைச்சருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம் என்றார்.

நவச்சிவாயம் பேச்சு
புதுச்சேரியில் கிராமங்கள் தோறும் 100% தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் தடுப்பூசி முகாமை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சித் தலைவருமான நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வருவதால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கும் எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார், மேலும் கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறிய அவர், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

நல்லாட்சி உறுதி
தொடர்ந்து பேசிய நமச்சிவாயம் முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர், நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பேச்சுவார்த்தை தேதியை சொல்வார். அமைச்சரவை பங்கீடு குறித்து முதலமைச்சருடன் பேசி சுமூக முடிவு எடுத்து வெகு விரைவில் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி கொடுப்போம். பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே எந்த வித குழப்பமும் இல்லை என கூறிய அவர் விரைவில் சுமுகமாக தீர்வு எட்டப்படும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications