விஜய் பொதுக்கூட்டத்துக்கு டூவீலரில் வந்த புஸ்ஸி ஆனந்த்.. ஹெல்மெட் இல்லாமல் பரபர என்ட்ரி!
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருகை தந்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தவெக தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறார். இதற்காக அவர் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தொடங்கினார். தொடர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் மக்களை சந்தித்து உரையாற்றினார். செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த ஒரு கூட்டத்தில், திறந்த வேனில் நின்றபடி அவர் மக்களுடன் உரையாடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் துரதிர்ஷ்டவசமாக 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பொது நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, தவெக சார்பில் உள் அரங்க கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டன. கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு உள் அரங்க கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விஜய் மீண்டும் இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முதலில், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி புதுச்சேரி போலீசார் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, கியூ.ஆர்.கோடுடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக புதுச்சேரி போலீசார் இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெளிவாகக் கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். விஜய், பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு, தமது வீட்டிலிருந்து தாமதமாகவே கிளம்புகிறார் எனக் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திட்டமிட்ட நேரத்தில் கிளம்பி உள்ளார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருகை தந்துள்ளார் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். சுசூசி ஸ்கூட்டி வாகனத்தை ஓட்டியபடி வருகை தந்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். அவரிடம் செய்தியாளர்கள் மறித்து கேள்வி கேட்ட நிலையில் வழிய விடு எனக் கூறிவிட்டு புறப்பட்டார் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications
