“தீபாவளி பரிசு” இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 - புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு!
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் பட்டியலினத்தவர்களுக்கு இலவசமாக வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக ரூ.500 வழங்கப்படும் என புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தீபாவளி பரிசு
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை (பாப்ஸ்கோ) சார்பில் புதுச்சேரி, திருக்கனுார் மற்றும் காரைக்காலில் சிறப்பங்காடி நடத்தப்பட உள்ளது. 25 வகை மளிகைப் பொருட்கள் ஒரே தொகுப்பாக இந்த சிறப்பங்காடிகள் மூலம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.முதற்கட்டமாக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தீபாவளி சிறப்பங்காடியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

அரிசி சர்க்கரைக்கு பதிலாக பணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அதுமட்டுமின்றி மலிவு விலையில் பட்டாசுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். தீபாவளி பரிசாக குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 500 பணம்
மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பட்டியலின மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக ரூ. 500 வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்துள்ளார். இந்த பணம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

1.25 லட்சம் பேருக்கு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் பிரிவைச் சார்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய 1,25,732 நபர்களுக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் ரூ.6,28,66,000 பணம், இலவச வேட்டி சேலைகளுக்கு பதிலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications