சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல.. அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்..நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல என்றும், அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் நாராணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள், விலைவாசி உயர்வு, ஆட்சிக் கவிழ்ப்பு, மதக் கலவரம் ஆகியவற்றை எடுத்துச்சொல்லும் வகையில் பாத யாத்திரை நடைபெறும். புதுச்சேரியில் தொகுதிதோறும் குழுக்கள் அமைத்துள்ளோம்.

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பாஜக அரசு இரட்டை ஆட்சி முறையை கொண்டுவந்து ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது என்று விமர்சித்தார். இதை முழுமையாக வரவேற்கிறேன். புதுச்சேரியில் என் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, ஆளுநர் மூலமாக ஆட்சியை முடக்கினர். நானும் பாதிக்கப்பட்டேன். நான் அனுபவித்ததையே ஸ்டாலினும் அனுபவிக்கிறார். மாநிலங்களில் அடிமை ஆட்சி நடக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. இது நீண்டகாலம் நீடிக்காது. விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சாவர்க்கரை தியாகி என்று கூறியுள்ளார். தமிழிசை செளந்தரராஜன் சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சேர்ந்தவர். தப்பித்தவறி பாஜகவில் உறுப்பினராகி, இப்போது ஆளுநராக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர் சாவர்க்கர். அவரை சுதந்திர போராட்ட தியாகியாக ஏற்க முடியாது.
அந்தமான் சிறையில் இருந்தபோது, சிறையிலிருந்து வெளியே வர ஆங்கிலேயர்களுக்கு 7 மன்னிப்பு கடிதங்களை எழுதியவர். இதனால் நிபந்தனையோடு அவர் விடுவிக்கப்பட்டார். வெள்ளையர்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டவர். எனவே அவர் சுதந்திர போராட்ட தியாகி அல்ல. சாவர்க்கர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்.
பாஜக சரித்திரத்தை மாற்ற நினைக்கிறது. இதனை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள். முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் தினந்தோறும் கொலைகள் நடக்கின்றன. கொலை நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. புதுச்சேரி மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் வருகை கேள்விக் குறியாகிவிடும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று விமர்சித்தார்.


Click it and Unblock the Notifications
