கோபி மஞ்சூரியன் சூப்பரா இருந்துச்சு.. மிஸ் பண்ணிட்டாங்க! தேநீர் விருந்து புறக்கணிப்பு! தமிழிசை கலகல
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ஆளுநர் விருந்தை அங்குள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், இது குறித்து ஆளுநர் தமிழிசை சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க இன்றைய தினம் கோலாகலமாகச் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றினர்.

அதன்படி புதுச்சேரியிலும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார். மேலும், அங்கு இன்று காலை துணைநிலை ஆளுநர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேநீர் விருந்தை அளித்தார்.
தேநீர் விருந்து: அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தெலுங்கானா ஆளுநராகவும் இருக்கும் நிலையில், புதுச்சேரியில் காலையிலும் தெலுங்கானாவில் மாலையிலும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. காலை 11.30 மணிக்குத் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனைக் காங்கிரஸ்-திமுக எம்ல்ஏக்கள் புறக்கணித்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வரவேற்ற ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அவைத் தலைவருக்குத் தனது கையால் பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, "கொள்கை முரண் நமக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால், சுதந்திர தினம் போன்றவை அனைத்தையும் தாண்டிது. அதில் கொள்கை எல்லாம் தாண்டி அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் தமிழிசை பேச்சு: ஆளுநர் விருந்து என்பதை யாரும் அலட்சியம் செய்யக் கூடாது. மத்திய அரசு அளித்த வழிகாட்டுதல்படி விடுதலை போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இங்குப் பலரையும் அழைத்துள்ளோம். அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு ஆளுநர் விருந்து நடத்தப்படவில்லை. அங்குக் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்வது அனைவருக்கும் தெரியும்.
சுதந்திர தினத்தன்று சகோதரத்துடன் அழைத்துக் கொண்டாட வேண்டும் என்பதே நமது ஆசை.. சுதந்திர தினத்தன்று எப்போதும் விருந்து வைத்துக் கொண்டாடுவதே நமது வழக்கம்.. இந்த விருந்தை நான் பார்த்துப் பார்த்துச் செய்தேன்.. உணவை நானாகத் தேர்வு செய்தேன்.. இதில் கலந்து கொள்ளாமல் இருப்பது பெருமை இல்லை.. அரசியல், கொள்கை ஆகியவற்றை தாண்டி நடக்கும் இதுபோன்ற விழாக்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியாக நடந்து முடிந்தது: இந்த விழாவில் சிலர் வரவில்லை என்பதால் எனக்கு எதுவும் குறைந்து போகாது.. அவர்கள் வரவில்லை என்பதால் எனக்குக் கவலையும் இல்லை. வந்தவர்களை மகிழ்ச்சியாக வரவேற்றோம்.. மகிழ்ச்சியாக விருந்து நடந்து முடிந்தது.

சிலர் தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு நான் கருத்துச் சொல்லக் கூடாது என்கிறார்கள். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்தவள்.. அங்கு என்ன நடந்தாலும் கருத்து கூற எனக்கு உரிமை இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று கூறினார்கள். அப்போது நான் எனக்குத் தெரிந்த உண்மையைச் சொன்னேன்.. அவ்வளவுதான்.
மிஸ் பண்ணிட்டீங்க: தமிழகத்தில் நடந்த சம்பவத்திற்குப் புதுச்சேரி ஆளுநராக இருப்பதால் நான் பதில் சொல்லக் கூடாது என்று திமுகவின் சிவா கூறி இந்த விருந்தை புறக்கணித்துள்ளார். இதனால் எனக்கு நஷ்டமில்லை. நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டாங்க.. நல்ல சுண்டைக்காய், நல்ல கோபி மஞ்சூரியன், நல்ல குல்பி என அனைத்தையும் மிஸ் செய்துவிட்டார்கள். நாங்கள் சந்தோஷமா சாப்பிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications