பாண்டி மெரினா கடலில் தென்பட்ட உருவம்.. விழுந்தடித்து ஓடிய புதுச்சேரி போலீஸ்.. கிட்ட போய் பார்த்தால்?
புதுச்சேரி: விக்ரவாண்டி மாநாட்டுக்கு வந்த தவெக தொண்டர்களில் சிலர், தொடர்ந்து, சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்கள்.. ஏற்கனவே மாநாட்டுக்கு வந்தபோது பலரும் காயமுற்ற நிலையில், சென்னையை சேர்ந்த சார்லஸ் என்ற தொண்டர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.
தவெக மாநாட்டுக்கு சென்ற 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மாநாட்டுக்கு செல்லும்போதும், மாநாட்டு நிகழ்விடத்திலும் உயிரிழந்த தொண்டர்களுக்கு நடிகர் விஜய் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டிருந்தார்.

சலசலப்பு: ஆனால், தொண்டர்களின் சலசலப்பு இன்னமும் குறையவில்லை.. சில தொண்டர்கள் தொடர் பாதிப்புகளுக்கு ஆளாகிவருகிறார்கள்.. மாநாட்டு தினத்தன்று, அதிகாலை 2.20க்கு விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் சற்று குறைவான வேகத்தில் சென்றது..
அப்போது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நிதிஷ்குமார் என்ற தவெக தொண்டர், விக்கிரவாண்டி ரயில் நிலைய பிளாட்பார்மில் துள்ளி குதித்ததில் படுகாயமடைந்தார். உடனே விழுப்புரம் ரயில்வே போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கோவில்பட்டி: அதேபோல, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் அருகே வந்துகொண்டிருந்தபோது, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் மாடசாமி உள்ளிட்ட 5 பேர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே, சென்னை கீழ்பாக்கம் சாமிதாசபுரத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்துவிட்டார்.. இவருக்கு வயது 32 ஆகிறது.. கூலித் தொழிலாளியான இவர், மாநாட்டு தினத்தன்று வி.சாலையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு வந்தார். மாநாட்டு திடலில் மாலை 3.10 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
மதுபோதை: இந்நிலையில், மது போதையில் புதுச்சேரி கடலில் விழுந்துள்ளார்கள் தவெக தொண்டர்கள்.. தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் சுந்தர்.. இவருக்கு 23 வயதாகிறது.. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு 23 வயதாகிறது.. இவர்கள் 2 பேரும் புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு வந்திருக்கிறார்கள்.. அப்போதுமுதல் 2 பேருமே மதுபோதையில் இருந்திருக்கிறார்கள்..
நேற்றைய தினம் பிரகாஷ் கடலிலும், சுரேஷ் சுந்தர் கடற்கரை பாறை இடுக்கிலும் மதுபோதையில் விழுந்து கிடந்தனர்.. இருவருமே கடற்கரையில் விழுந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, சுரேஷ் சுந்தர், பிரகாஷ் இருவரையும் மீட்டு முதலுதவி அளித்தனர். பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.
மெரினா கடற்கரை: அப்போதுதான், விக்கிரவாண்டி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை முடித்துகொண்டு அன்று இரவு புதுச்சேரிக்கு வந்ததாகவும் பல இடங்களிலும் சுற்றிய அவர்கள் நேற்று பாண்டி மெரினா கடற்ரையில் மதுபோதையில் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக, உயிரிழந்த தொண்டர் கலையின் உறவினர்கள் சொல்லும்போது, பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக இருந்த கலை, அவரது மாநாட்டிற்கு செல்லும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் இவர் முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பியிருந்தனர்.. விஜய்க்காகவே தனது வாழ்நாளை இழந்த அவரது ரசிகர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலிருந்து எந்த வித ஆறுதலோ நிதி உதவியோ செய்யவில்லை என்று ஆதங்கத்தை கொட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications