புதுச்சேரியில் ரங்கசாமி அரசு செய்த முதல் அதிரடி.. கலங்கிப்போன மதுப்பிரியர்கள்.. காலியான பாக்கெட்!
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுவையில் கொரோனா முதல் அலை பரவலுக்கு பின் கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது புதுச்சேரியில் ஆட்சியில் இருந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு வரி விதித்தது. இதனால் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு நிகராக புதுச்சேரியிலும் உயர்ந்தது.

கொரோனா வரி
இதன் காரணமாக , புதுச்சேரி, தமிழகம் என இரண்டு மாநிலங்களிலும் விற்கப்படும் மதுபான வகைகளுக்கு ஒரே மாதிரியான விலைக்கு மாறிவிட்டது. புதுச்சேரியில் மட்டும் விற்கப்படும் 766 மதுபானங்களின் வகைகளுக்கு 25 சதவீத கொரோனா வரியும் விதிக்கப்பட்டது.

11 மாதங்கள் விலை உயர்வு
மதுபானங்கள் விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி சென்று மது அருந்துவது குறைந்தது. மதுவால் கிடைக்கும் வருவாயும் வெகுவாக குறைந்தது. தங்கும் விடுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் குறைந்தது. 11 மாதங்கள் விலை உயர்வு அமலில் இருந்தது.

விலை குறைப்பு
இந்நிலையில் மதுபானங்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று புதுச்சேரியில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனால் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் கொரோனா சிறப்பு வரியை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் நீக்கி உத்தரவிட்டார். இதனால் கடந்த 2மாதங்களாக மதுபானங்களின் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

என்ஆர் காங்கிரஸ் அரசு
இதனிடையே கொரோனா 2-ஆவது அலை காரணமாக, புதுவைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. மது விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது. அரசுக்கு வருவாய் பெரிய அளவில் குறைந்தது. இதையடுத்து ரங்கசாமி தலைமையிலான என்ஆர்காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு மதுபானங்களின் மீதான வரியை உயர்த்த முடிவு செய்தது.

வரி அதிகரிப்பு
இதன்படி படி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் உத்தரவுப்படி , உள்நாடு மற்றும் வெளிநாடு என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 15) முதல் 20 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்படுவதாக கலால் துறை துணை ஆணையர் டி.சுதாகர் புதுச்சேரி அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

மதுபானங்கள் விலை
இது தொடர்பாக ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பின் படி, புதுவை அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிரந்தர சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால், புதுவையில் அனைத்து மதுபானங்களின் விலையும் இன்று முதல் 20 சதவீதம் உயர்கிறது என்று கூறப்பட்டது. இதன்படியே புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகளில் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்த்தி விற்கப்படுகிறது. கடைசியாக 2018ம் ஆண்டு புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது.












Click it and Unblock the Notifications