2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார் அம்மாநில முதல்வர் என்.ரங்கசாமி. இன்று தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் ரங்கசாமி. 2 முறை போட்டியிட்ட போதெல்லாம் முதலமைச்சர் ஆனார் ரங்கசாமி. அந்த ஃபார்முலாவை தற்போதும் அவர் நம்புவதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரு தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 23 கடைசி நாள். இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றன.

புதுச்சேரியில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. அதேபோல என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி ஏனாமில் தோல்வி அடைந்தார். தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் ரங்கசாமி. ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து 2 தொகுதி ஃபார்முலாவை இந்த முறையும் அவர் பின்பற்றுகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ரங்கசாமி. 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சரானார் ரங்கசாமி.
2016ல் தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார் ரங்கசாமி. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. எதிர்கட்சி தலைவரானார் ரங்கசாமி.
2021ல் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகள் போட்டியிட்டு, ஏனாமில் தோல்வி அடைந்தார் ரங்கசாமி. தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றார். என்.ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார் ரங்கசாமி.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிடுகிறார் ரங்கசாமி. என்.டி.ஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16 இடங்கள், பாஜக 10 இடங்கள், அதிமுக, லஜக தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரி அரசியலில் ஆன்மீக நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர் ரங்கசாமி. ரங்கசாமி, 90களில் அப்பா பைத்தியசாமியைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிர பக்தராக மாறினார். முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தை கும்பிடாமல் எங்கேயும் புறப்பட மாட்டார். அந்தவகையில் நேற்று சேலம் சென்று அப்பா பைத்தியசாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் ரங்கசாமி.
மேலும், எந்த ஒரு முக்கியப் பணியைத் தொடங்குவதற்கு முன்னரும் கதிர்காமத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது ரங்கசாமியின் வழக்கம். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களையும் முருகன் பாதத்தில் வைத்து அவர் அர்ச்சனை செய்தார். இதனையடுத்து கட்சித் தொண்டர்கள் புடைசூழ அவர் தேர்தல் அலுவலகத்திற்குப் புறப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications