போனவாரம் கூட 'சூப்பர்' அமைச்சர்னு ஆளுநர் தமிழிசை பாராட்டினாரே..புதுவை சந்திரபிரியங்கா 'புது குண்டு'
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா விவகாரம் ராஜினாமா செய்த போது வெளியிட்ட 2 பக்க அறிக்கையின் அனலே இன்னும் ஓயவில்லை. இதற்கு அடுத்ததாக 9 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
புதுச்சேரி அமைச்சராக இருந்த என்.ஆர். காங்கிரஸின் சந்திரபிரியங்கா திடீரென பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது- தலித் பெண் என்பதால் ஒடுக்கப்படுகிறேன் என்றெல்லாம் குமுறி இருந்தார். இத்தனைக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி, மகளைப் போலவே அரவணைத்து வழிநடத்திக் கொண்டிருந்தவர். ஏனெனில் ரங்கசாமியின் அரசியல் சகாவான மாஜி அமைச்சர் சந்திரகாசு மகள்தான் சந்திரபிரியங்கா.

தமிழிசையின் பேட்டி: இப்போது 'அப்பா' ஸ்தானத்தில் இருந்த முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி 'ஜாதிய பாகுபாடு' குற்றம்சாட்டி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார் சந்திரபிரியங்கா. இது ஒரு பக்கம் இருக்க, சந்திரபிரியங்கா மீது முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் இருந்தார்; சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்யும் முடிவில் இருந்தார். இது பற்றி எல்லாம் என்னிடம் முதல்வர் ரங்கசாமி பேசினார் என வெளிப்படையாக பிரஸ்மீட்டில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி தர இன்னும் பரபரப்பாகிவிட்டது புதுவை அரசியல் களம்.
சாதனை பட்டியல் வெளியீடு: இதனைத் தொடர்ந்து சந்திரபிரியங்கா 9 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தாம் பதவி வகித்த போக்குவரத்து துறை, ஆதி திராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறையில் என்ன என்ன சாதனைகள் செய்யப்பட்டன? என்பதை பாயிண்ட் போட்டு விளக்கி இருக்கிறார். அதாவது தமது அமைச்சரவை செயல்பாடுகளில் 'அதிருப்தி'யில் இருந்தார் முதல்வர் ரங்கசாமி என்பதை மறுக்கும் வகையில்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன்: ஆனால் இதே அறிக்கையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் போகிற போக்கில் கோர்த்துவிட்டுள்ளார் சந்திரபிரியங்கா. அதாவது கடந்த வாரம் கூட என்னுடைய அமைச்சரவைப் பணிகள் சிறப்பாக இருக்கிறது என பாராட்டியவர்தான் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என விவரித்துள்ளார் சந்திரபிரியங்கா. இதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
தொட்டிலை ஆட்டி பிள்ளையை கிள்ளுதல்: அதாவது முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே அவரது அமைச்சராக சந்திரபிரியங்காவை ஆஹோ ஓஹோவென பாராட்டி பேசுவது; அதே அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த பின்னர், முதல்வர்தான் பாவம்... சந்திர பிரியங்கா மீது அதிருப்தியில் இருந்தார் டிஸ்மிஸ் செய்ய நினைத்தார் என இன்னொரு கதை சொல்வது என்பது எல்லாம் 'ஏதோ' ஒரு ஆட்டத்தின் பரமபத விளையாட்டு என்பது அப்பட்டமாக தெரிகிறது; இந்த ஆட்டத்தை ஆடுகிறவர்களுக்கு இது தெரியவில்லை என்கின்றனர் புதுச்சேரி மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications