பொறாமையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட மாணவர்.. கொந்தளிக்கும் மக்கள்.. காரைக்காலில் கடையடைப்பு
புதுச்சேரி: விஷ குளிர்பானத்தை குடித்து பலியான மாணவர் விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால் நகரப் பகுதியில் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன், மாலதி இவர்களுடைய மகன் பால மணிகண்டன். ராஜேந்திரன் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன்
பாலமணிகண்டன் நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நன்றாக படிக்கும் மாணவரான மணிகண்டன் வகுப்பில் முதலாவதாக வருவார். கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்பார்.
சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் வாட்ச் மேன் கொடுத்த குளிர்பானத்தை குடித்து விட்டு பிற்பகலில் வீட்டிற்கு சென்றார். தனக்கு குளிர்பானம் கொடுத்து விட்டீர்களா என பெற்றோரிடம் கேட்டான். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறிய போது திடீரென சிறுவன் வாந்தி எடுத்து விட்டு மயங்கி விழுந்தான்.

மாணவன் மரணம்
அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

பொறாமையில் விஷம் கொடுத்த தாய்
அதில் பாலமணிகண்டனுடன் படிக்கும் சகமாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரிதான் பள்ளி காவலாளி தேவதாஸிடம் எதையோ கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடைய மகளை விட மாணவன் பால மணிகண்டன் நன்றாக படிப்பார் என்பதால் அவர் பால மணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது.

அரசு மருத்துவமனை அலட்சியம்
பால மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, காவல்துறையினரும் டாக்டர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான். எனவே போலீஸ், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டினர்.

கடையடைப்பு போராட்டம்
பாலமணிகண்டன் குடும்பத்தினரை சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் ஆதரவு
கடையடைப்பு போராட்டத்திற்கு காரைக்கால் இந்து முன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு-பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினி டெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் காரைக்கால் நகரமே அமைதியாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications