லட்சுமி.. லட்சுமி.. யானையை பிடித்துக்கொண்டு கதறி அழுத பாகன்.. கலங்கிய மக்கள்! இதுதான் உண்மையான அன்பு
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி பலியான சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 35 வயது கூட ஆகாத இந்த யானையின் மரணம் மக்கள் இடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த யானை 1997ம் வருடம் வாங்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு பரிசாக இந்த யானையை வழங்கியது.
அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த கோவிலில் 25 வருடங்களாக இந்த யானை ஒன்று மட்டுமே இருந்தது.
அதிகாலையில் வாக்கிங் போன லட்சுமி யானை..மயங்கி விழுந்து மரணம்..மணக்குள விநாயகர் கோவிலில் சோகம்

யானை பிரபலம்
மக்கள் இடையே இந்த யானை மிகவும் பிரபலமாக இருந்தது. தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, பின் பக்கம் குளிப்பது, மணலில் விளையாடுவது, கோவில் பிரசாதங்களை சாப்பிடுவது என்று இந்த வாழ்ந்து வந்துள்ளது. இந்த யானை கோவில் யானைகளுக்கே இருக்கும் சாந்தமான குணத்துடன் இருந்துள்ளது. இதன் சாந்தமான குணம் காரணமாக பக்தர்கள் இடையில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த யானையை பார்க்கவே பலர் கோவிலுக்கு வருவது உண்டு.

லட்சுமி
லட்சுமி யானை.. லட்சுமி யானை என்று இது உள்ளூரில் மிக பிரபலமாக இருந்துள்ளது. இந்த யானையை எடுத்து சிலர் ரீல்ஸும் போட்டுள்ளனர். அந்த அளவிற்கு இந்த யானையை உள்ளூர் மக்கள் பலருக்கும் பிடிக்கும். இந்த நிலையில் அந்த யானைக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த யானைக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன்பின் உடல்நிலை சரியான யானை, இன்று காலை பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்க வந்தது. அப்போது திடீரென காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு செல்லும் வழியில் மயங்கி விழுந்தது.

மரணம்
இதை சோதனை செய்ததில் யானை மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நலக்குறைவு காரணமாக யானை மரணம் அடைந்தது. லட்சுமியின் உடலை கிரேன் மூலம் மணக்குள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அந்த யானையை கொண்டு செல்லும் வழி முழுக்க மக்கள் நின்று யானைக்கு அஞ்சலி செலுத்தினர். நூற்றுக்கணக்கில் மக்கள் . நின்று யானைக்கு இரங்கல் தெரிவித்தனர். மக்கள் பலர் கண்ணீர்விட்டபடி யானைக்கு விடை கொடுத்தனர். பெண்கள் பலர் கண்ணீர்விட்டபடி வழியில் நின்றது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அதிர்ச்சி
புதுச்சேரியில் யானை லட்சுமியின் மறைவு காரணமாக பாகன் சக்திவேல் அங்கேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். யானையை பிடித்துக்கொண்டு ஓ என்று அழுதார். லட்சுமி. லட்சுமி இப்படி போயிட்டியே லட்சுமி.. எப்படி இருப்பா கம்பீரமா.. இப்படி படுத்து இருக்குறாளே.. பார்க்க முடியலையே என்று கூறி அழுதார். கோவில் நிர்வாகிகள் அவரை கட்டிப்பிடித்து தைரியமா இரு சக்தி.. அழுவாத என்று கூறி தேற்றினர். ஆனாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் யானை கட்டிப்பிடித்துக்கொண்டு சக்திவேல் அழுதுகொண்டே இருந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.அந்த யானையுடன் பாகன் சக்திவேல் மிகவும் அன்பாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால்தான் யானையின் மறைவை பாகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.